ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களிலிருந்து 100 பேர் வரை விடுவிப்பு

ஆஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட சுமார் 100 பேர், கிறிஸ்மஸ் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Villawood

Source: AAP

சமூகத்திற்கு ஆபத்து விளைவிப்பதற்கான சாத்தியம் குறைவானவர்களை இத்தகைய தடுப்புமையங்களிலிருந்து விடுவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை விரைவுபடுத்துமாறு, லேபர்கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசு, ஒருவரது நன்நடத்தையின் அடிப்படையில்- அல்லது அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்று உறுதிசெய்யப்பட்டதின் அடிப்படையில் - அல்லது குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் அமைப்புக்களோடு தொடர்புகளை கொண்டுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் - அவரது விசாவை ரத்துச்செய்துவிட்டு காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும் என்ற வகையில் பலர் நாடெங்குமுள்ள குடிவரவு தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாத ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய பாரதூரமான குற்றச்செயல் ஒன்றைப் புரிந்திருந்தால் அவரது விசாவை நிராகரித்து நாடுகடத்தமுடியும்.

குறித்த நபர் நாடுகடத்தப்படும்வரை தடுப்புக்காவலில் இருக்க வேண்டும். அல்லது அவர் நாடு கடத்தப்படுவதற்கான சூழ்நிலை இல்லாதபட்சத்தில் அந்நபர் காலவரையறையற்ற தடுப்புக்காவலில் இருக்க நேரிடுகிறது.

இந்தப்பின்னணியில் தடுப்புக்கால எல்லை, அவரது வழக்கின் தன்மை, நடத்தை மற்றும் நாட்டின் பாதுகாப்பு உட்பட பல அம்சங்களில் தங்கியுள்ளதாகவும், தடுப்புக்காவல் காலத்தை குறைப்பதற்கான பல்வேறு வழிகள் தொடர்பில் தமது அரசு ஆராய்ந்துவருவதாகவும் லேபர் கட்சி தெரிவித்திருந்ததன் அடிப்படையில் தற்போதைய கிறிஸ்மஸ் விடுமுறைக்காலத்தில் 100 பேர் வரை தடுப்புமுகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 23ம் திகதியிலிருந்து, சிட்னியில் உள்ள Villawood மற்றும் Broadmeadowsஇல் உள்ள மெல்பன் குடிவரவு தடுப்பு முகாம் உள்ளிட்டவற்றிலிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படும் குடிவரவு தடுப்பு முகாம்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் தடுத்துவைக்கப்படும் சராசரி காலப்பகுதி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காணப்படுவதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 29 December 2022 5:00pm
Updated 29 December 2022 5:22pm
Source: SBS

Share this with family and friends