புகலிட கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் இருப்பது பலருக்கு மனப் பதட்டத்தைக் கொடுத்தாலும் வலுவான புகலிட கோரிக்கை இல்லாதவர்களுக்கு அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்குக் கூடுதல் காலத்தைப் பெற்றுத் தருவதாக Refugee Council தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசு மேற்கொண்டு வரும் குடிவரவு மீளாய்வு செயற்பாட்டிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலே Refugee Council இவ்வாறு தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் புகலிட கோரிக்கை விண்ணப்பம் ஒன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள, சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது என்றும் அதே போன்று Administrative Appeals Tribunal நிர்வாக மீளாய்வு தீர்பாயம் முன்பு 38,000 மீளாய்வு வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன என்றும், இது கிட்டதட்ட ஆறு வருடங்களுக்கான வழக்கு எண்ணிக்கை என்றும் Refugee Council தனது அறிக்கையில் சுட்டிகாட்டி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் 96,371 பேரில், 70% (67,790) பேர் உள்துறை அமைச்சகம், தீர்ப்பாயம் அல்லது ஃபெடரல் நீதிமன்றத்தின் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்., 26,425 பேர் இன்னும் ஆரம்ப முடிவைப் பெறவில்லை என அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது.
2021-22 இல் AAT 5,819 அகதிகள் மீளாய்வு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முடிவு செய்துள்ளது. ஆனால் 10,743 புதிய மீளாய்வு விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. அதாவது AAT பரிசீலனை செய்ததை விட புதிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகம்.
கடந்த டிசம்பரில் Albanese அரசு Administrative Appeals Tribunalயை கலைப்பாத அறிவித்தது. நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட tribunal உறுப்பினர்களுடன் விரைவில் AAT தீர்பாயம் அமைக்கப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் மற்றும் AAT ஆகியவற்றில் புகலிட கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் தொடர்ந்து நிலவி வரும் பின்னடைவானது பாதுகாப்பு பெற்றுக்கொள்ள தகுதியான கோரிக்கைகள் இல்லாவிட்டாலும் கூட புகலிட விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தபின் பல வருடங்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது ஆட்கடத்தல் செய்பவர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைந்துவிடக்கூடும் என Refugee Council எச்சரித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.