கடந்த ஏழு மாதங்களில் 4.3 மில்லியன் விசாக்கள் பரிசீலப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது வெகு நாட்களாக திறன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கும், புதிய மாணவர்களின் வருகைக்கு தயாராகும் கல்வி நிறுவனங்களுக்கும் மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் 2.2 மில்லியன் சுற்றுலா விசாக்கள், 370,000 மாணவர் விசாக்கள் மற்றும் 64,000 தற்காலிக திறன் விசாக்கள் ஆகும்.
கடந்த ஆண்டு நடந்த பெடரல் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்று Anthony Albanese பிரதமராக பதிவியேற்றபோது நிலுவையில் இருந்தாக கூறப்பட்ட சுமார் ஒரு மில்லியன் விசா விண்ணப்பங்களில் சுமார் 400,000 வீசா விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கென திணைக்களத்தில் கூடுதலாக 400 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதனை அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 400,000 விசாக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இதே வேகத்தில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டால் மீதமுள்ள 600,000 விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு விடும் என எதிர்பார்ப்பதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்தார்.
ஒருபுறம் நிலுவையில் உள்ள வீசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூன் 1 முதல் குடிவரவுத் துறைக்கு கூடுதலாக 4 மில்லியன் புதிய விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 2022 வரையிலான ஐந்து மாதங்களில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடமிருந்து 137,395 மாணவர் விசா விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் தங்களின் கற்கைநெறி ஆரம்பமாவதற்கு குறைந்தது ஆறு வாரங்களுக்கு முன்னதாக வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தங்கள் விசாவின் நிலையைப் பற்றி அறிந்துக்கொள்ள உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு படிவம் ஒன்றை திணைக்களம் உருவாக்கியுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.