அகதிகளை ஆஸ்திரேலியா அழைத்துவருவதற்கான சட்டமுன்வடிவு நாடாளுமன்றில் தோல்வி!

Nauru

Source: AAP

நவுறு மற்றும் பப்புவாநியூகினியில் வாழ்ந்துவரும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை, ஆஸ்திரேலியா அழைத்துவரவேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்றில் தாக்கல்செய்யப்பட்ட சட்டமுன்வடிவு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

Evacuation to Safety என்ற இச்சட்டமுன்வடிவு, நியூசிலாந்து அல்லது அமெரிக்கா போன்ற மூன்றாவது நாட்டில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதை முன்மொழிந்தது.

கிரீன்ஸ் கட்சியின் செனட்டர் Nick McKim அவர்களால் தாக்கல்செய்யப்பட்ட இச்சட்ட முன்வடிவு, இன்றையதினம் செனட் அவையில் 12-24 வாக்குகள் என்ற அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக கிரீன்ஸ்கட்சி, செனட்டர்கள் David Pocock மற்றும் Lidia Thorpe உள்ளிட்டோர் வாக்களித்திருந்த அதேநேரம், லேபர்கட்சி, லிபரல்-நஷனல் கூட்டணி மற்றும் One Nation கட்சி ஆகியன எதிராக வாக்களித்திருந்தன.

இதுதொடர்பில் கருத்துத்தெரிவித்துள்ள சுயாதீன செனட்டர் David Pocock, அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில், அவர்களது அடிப்படை மனிதாபிமான உரிமைகளை இரண்டு தசாப்தங்களாக ஆஸ்திரேலியா மறுத்து வருகிறது என விமர்சித்துள்ளார்.

குறிப்பாக நவுறு மற்றும் பப்புவாநியூகினியில் வாழ்ந்துவரும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நவுறுவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கொண்டுவந்தால் அது நவுறு அரசை அவமதிக்கும் செயலாகும் என்பதால், இச்சட்டமுன்வடிவு ஆதரிக்கப்பட கூடாது என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

அதேபோன்று பப்புவாநியூகினியில் இருப்பவர்களுக்கான சட்டரீதியான பொறுப்பு ஆஸ்திரேலியாவுக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

நவுறுவில் தற்போது 66 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர், பப்புவா நியூ கினியில் இன்னும் 92 பேர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தடுப்புக்காவலில் இல்லை என்றபோதிலும் சுதந்திரமற்ற மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் வாழ்கின்றனர் எனவும், பலருக்கு கடுமையான மன மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் உள்ளன எனவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப்பின்னணியில் குறித்த சட்டமுன்வடிவு தோற்கடிக்கப்பட்டிருப்பதானது பப்புவா நியூ கினி மற்றும் நவுறுவில் வாழ்பவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதாகக் கூறிய சுயாதீன செனட்டர் David Pocock, இந்த மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தார்மீக பொறுப்பு அரசிற்கு உள்ளது என்று வாதிட்டார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 8 March 2023 3:02pm
Updated 8 March 2023 3:08pm
Source: SBS

Share this with family and friends