IELTS பரீட்சை எழுதுபவர்களுக்கு புதிய சலுகை!

IELTS தேர்வு எழுதுபவர்கள் இப்போது தங்கள் குடிபெயர்வு மற்றும் தொழில் இலக்குகளை அடையத் தேவையான மதிப்பெண்ணைப்பெற உதவும் புதிய சலுகையைப் பெற்றுள்ளனர்.

IELTS exam

Credit: IELTS

சர்வதேச படிப்பு, குடிபெயர்வு மற்றும் வேலை போன்றவற்றுக்கான ஆங்கிலப்புலமையை நிரூபிப்பதற்கு பலர் எழுதும் International English Language Testing System (IELTS) பரீட்சையில் One Skill Retake (OSR) என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

IELTS தேர்வானது reading, writing, speaking, listening என மொத்தம் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இப்பரீட்சையை எழுதும் நபர் நான்கு பிரிவுகளிலும் குறிப்பிட்டளவு மதிப்பெண்ணை பெறவேண்டுமென்பது பெரும்பாலான சர்வதேச படிப்பு மற்றும் குடிபெயர்வு போன்றவற்றிற்கான முன் நிபந்தனையாகும்.

குறித்த நபர் இந்நான்கு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேவையான மதிப்பெண்ணைப் பெறத்தவறும்பட்சத்தில் அவர் IELTS பரீட்சையை மீண்டும் முழுவதுமாக எழுதவேண்டிய நிலை இதுவரை காணப்பட்டது.

ஆனால் புதிய One Skill Retake (OSR) சலுகையின்படி ஒருவர் தனது முதல் முயற்சியில் ஏதேனுமொரு பிரிவில் தேவையான மதிப்பெண் பெறத்தவறினால், அந்நபர் குறிப்பிட்ட பிரிவுக்கான பரீட்சையை மட்டும் மீண்டும் எழுத அனுமதிக்கப்படுவார்.

ஒரு தடவை மாத்திரம் இச்சலுகை வழங்கப்படும்.

ஆஸ்திரேலியாவில், OSR பரீட்சார்த்த திட்டம் சமீபத்தில் ILETS நிர்வாகத்தால் குறிப்பிட்ட தேர்வு எழுதுபவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய OSR சலுகை இப்போது நாட்டின் தலைநகரங்களில் வரையறுக்கப்பட்ட தேர்வு மையங்களில் கிடைக்கிறது.

விசா subclass 476, 482 மற்றும் 485 ஆகிய விண்ணப்பங்களைத் தவிர்த்து, ஏனைய விண்ணப்பங்களுக்கு OSR உடனான IELTS பரீட்சை முடிவுகளை உள்துறை அமைச்சு ஏற்றுக்கொள்ளும் என குறித்த அமைச்சின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

OSR சலுகை 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா முழுவதிலும் கிடைக்கும் என்றும், மார்ச் 2023 முதல் இந்தியாவிலும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 4 January 2023 4:51pm
Updated 4 January 2023 5:23pm
Source: SBS

Share this with family and friends