குயின்ஸ்லாந்து மாநிலம் Gold Coastஇல் தமது வாழ்க்கையையும் வீட்டையும் கட்டியெழுப்பிய பர்மிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தியாவைச் சேர்ந்த பர்மிந்தர் சிங் 2008 இல் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு வந்து social welfare துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து உள்ளூர் உணவகத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார்.
Regional ஆஸ்திரேலியாவில் தங்கள் முதலாளியால் பரிந்துரைக்கப்பட்ட திறமையான தொழிலாளர்கள் நிரந்தரமாக வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கும் regional sponsored விசாவிற்கு (Subclass 187) பர்மிந்தர் சிங் 2016 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரின் தலையீட்டிற்கு சிங் விண்ணப்பித்த போதிலும் அதுவும் வெற்றிபெறவில்லை.
“எனக்கு வேறு வழியில்லாததால், துறைகளை மாற்றி social welfare துறையில் வேலை செய்யமுடிவு செய்தேன். கோவிட் (தொற்றுநோய்) காலத்தில் youth workerராக வேலை கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். ஆனால் நான் skills assessmentற்கு விண்ணப்பித்தபோது, இந்தத் துறையில் இன்னும் இரண்டு வருட அனுபவம் தேவை என்று என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் SBS பஞ்சாபியிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு bridging visa E வழங்கப்பட்டதாகவும், வேறு எந்த விசாவிற்கும் விண்ணப்பிப்பதற்கு வழிகள் இல்லாததால் மே 31 க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தனது புதிய வேலையின் அடிப்படையில் இரண்டாவது தடவையாக, அமைச்சரின் தலையீட்டிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"Youth workerராக எனது இரண்டு வருட பணி அனுபவத்தை முடிக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் நான் skills assessmentற்கும் பின்னர் நிரந்தர வதிவிடத்திற்கான மற்றொரு விண்ணப்பத்திற்கும் மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு முன் அவர்கள் என்னை நாடு கடத்தினால், நான் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதற்கு வழி இருக்காது ”என்று அவர் மேலும் கூறினார்.
37 வயதான பர்மிந்தர் சிங்கிற்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
"நான் இங்கு படித்தேன், வாழ்ந்தேன், வேலை செய்தேன். எனக்கு எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான், அவன் இங்கு பிறந்து வளர்ந்தவன். இந்தியாவுக்கு சென்றதில்லை. நாங்கள் நாடு கடத்தப்பட்டால் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவதற்கான வழி இருக்காது.இது எனது குடும்பத்தின் எதிர்காலத்தை, குறிப்பாக எனது மகனின் உடல்நலம் மற்றும் கல்வியைப் பாதிக்கலாம் ”என்று அவர் SBS பஞ்சாபியிடம் தெரிவித்தார்.
இந்தப்பின்னணியில் பர்மிந்தர் சிங் குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறி அமைச்சரை வலியுறுத்தும் வகையில் சுமார் 12,000 பேரின் கையெழுத்துகள் அடங்கிய மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.