மேற்கு ஆஸ்திரேலியா பெர்த்தில் வாழ்ந்துவரும் இந்தியக்குடும்பத்தினர், மகனது நோய்நிலைமை காரணமாக நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த நிலையில், இவ்விடயத்தில் குடிவரவு அமைச்சரின் தலையீடு காரணமாக இவர்கள் தொடர்ந்தும் ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா கேரளாவைச் சேர்ந்த அனீஷ் கொல்லிக்கரா மற்றும் கிருஷ்ணதேவி அனீஷ் தம்பதியர், தமது இரு குழந்தைகளுடன் கடந்த 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றனர். 10 வயது மகன் ஆர்யனுக்கு Down syndrome எனும் நோய்நிலைமை உள்ளது. மகள் ஆர்யஸ்ரீக்கு 8 வயது.
பெற்றோர் இருவரும் மேற்கு ஆஸ்திரேலியாவில் முக்கியமான தொழில்களில் பணிபுரிகின்றனர் - தாயார் கிருஷ்ணதேவி ஒரு இணைய பாதுகாப்பு நிபுணர் மற்றும் தந்தை அனீஷ் தொலைத்தொடர்பு துறையில் முக்கிய பணியில் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆர்யன் மற்றும் ஆர்யஸ்ரீ இருவரும் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவில்தான் கழித்துள்ளனர்.
இருப்பினும் ஆர்யனின் நோய்நிலைமையுடன் தொடர்புடைய மருத்துவ செலவுகள் அதிகம் என்பதாலும், இத்தகைய நோய்நிலைமையுள்ள குழந்தை வரி செலுத்துவோருக்கு சுமையாக கருதப்படுவதாலும், கிருஷ்ணதேவி -அனீஷ் தம்பதியரின் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இக்குடும்பம் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டிருந்தது.
இந்நிலையில் குடிவரவு அமைச்சின் இச்செயல் மனிதாபிமானமற்றது என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்ட அதேநேரம், குடிவரவு அமைச்சர் Andrew Giles இவ்விடயத்தில் தலையிட்டு, குறித்த குடும்பம் நாடு கடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற குரல்கள் வலுத்திருந்தன.
இதற்கிணங்க இவ்விடயத்தில் தலையிட்டுள்ள குடிவரவு அமைச்சர் Andrew Giles, தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி கிருஷ்ணதேவி -அனீஷ் தம்பதியரது நிரந்தர வதிவிட உரிமைக்கான விண்ணப்பத்தை அங்கீகரித்துள்ளதாக People With Disability Australia பொருளாளர் சுரேஷ் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடுவில் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருந்த பின்னணியில் வெளிவந்துள்ள இந்த முடிவு, கிருஷ்ணா அனீஷ் தம்பதியரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்குவதற்கு வழிசெய்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.