பெப்ரவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையான காலப்பகுதிக்குரிய தரவுகளை, ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிலையில் சுமார் 100,217 பேர் உள்ளனர்.
இவர்களில் 72,875 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இன்னமும் நாடு கடத்தப்படாத நிலையில் உள்ளனர். மீதி 27,342 பேரின் விண்ணப்பங்கள் உண்மையான அகதிகள்தானா என நிர்ணயம் செய்யப்படுவதற்காக காத்திருக்கின்றன.
லேபர் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மொத்தமாக 12,859 பேர் ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் பெப்ரவரியில் விண்ணப்பங்களை தாக்கல்செய்த 1,725 பேரும் அடங்குவர்.(இவர்களில் 61 பேர் இலங்கைப் பின்னணி கொண்டவர்கள்)
இதேவேளை பெப்ரவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையான காலப்பகுதியில் 142 பேருக்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் இலங்கைப் பின்னணிகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 2021 இல் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர், புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் மிகவும் அதிகமாக தாக்கல்செய்யப்படுவதாகவும், இவற்றுக்கான பரிசீலனைக்காலம் மிக அதிகரித்திருப்பதாகவும், குடிவரவுத் துறையின் முன்னாள் துணைச் செயலாளர் ரிஸ்வி The Guardian-இடம் தெரிவித்தார்.
மேலும் 1 லட்சம் புகலிடக்கோரிக்கையாளர்கள் நாட்டில் தற்போது இருப்பதாகவும், இத்தகைய நிலையை தான் முன்பு கண்டிருக்கவில்லை எனவும் ரிஸ்வி சுட்டிக்காட்டினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.