ஆஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்ட மற்றுமொரு இந்திய சுற்றுலாப்பயணி: ABF மீளாய்வு

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்த மற்றுமொரு சுற்றுலாப்பயணி தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இதுதொடர்பில் மீளாய்வு நடத்தப்படும் என ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர்(ABF) தெரிவித்துள்ளனர்.

ABF

Credit: Australian Border Force

கடந்த செப்டம்பர் மாதம் பெர்த்தில் மூன்று இந்திய சுற்றுலா பயணிகள், தங்களது மனைவிமார் இல்லாமல் பயணம் செய்ததற்காக, 110 மணி நேரம் ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டு, சட்டப்போராட்டத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் மற்றொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Diljith Thoppil Girijan என்ற 23 வயது சுற்றுலாப்பயணி, இந்தியாவிலிருந்து பெர்த் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது, அவரை சுமார் 9 மணிநேரங்கள் ABF அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.

அவரது விசா விண்ணப்பத்தில் தாயாரையும் அழைத்துக்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் மட்டும் தனியாக வந்திருப்பதாகவும், அவரது பணியிடத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்த திகதிக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்திருப்பதாகவும் ABF அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையடுத்து Girijan-இன் விசா ரத்துச்செய்யப்பட்டு, நாடுகடத்தும்பொருட்டு ஹோட்டல் ஒன்றில் 5 நாட்கள் தங்கவைக்கப்பட்டார்.

இதற்கிடையில் தனது விசா ரத்துச்செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றின் உதவியை Girijan நாடியிருந்தார்.

தனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அழைத்துவர முடியவில்லை எனவும், தனது பணியிட விடுப்பு திகதியை அவர் மாற்றியிருந்ததாகவும் நீதிமன்றிடம் தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த வழக்கில் தமது பக்கம் தவறு(Jurisdictional error) நடந்துள்ளமையை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை ஏற்றுக்கொண்டதுடன் Girijan-க்கு ஏற்பட்ட 9,500 டொலர் சட்டச்செலவை ABF ஏற்றுக்கொண்டது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தன்னை ஒரு குற்றவாளியை விசாரிப்பதுபோல அதிகாரிகள் விசாரித்திருந்ததாக Girijan குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே செப்டம்பர் மாதம் 3 இந்தியர்கள் தடுத்துவைக்கப்பட்ட விவகாரத்திலும், 'Jurisdictional error' இடம்பெற்றுள்ளமையை குடிவரவுத்துறை ஒப்புக்கொண்டிருந்த பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என ABF தெரிவித்துள்ளது.

மேலும் இத்தகைய தீர்மானங்கள் குறிப்பிட்ட நாட்டவர்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் தாம் சுட்டிக்காட்டுவதாக, ABF பேச்சாளர் SBS மலையாளத்திடம் தெரிவித்துள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 16 November 2022 4:14pm
Updated 16 November 2022 4:38pm
By Renuka
Source: SBS

Share this with family and friends