மொபைல் வேக கமரா எச்சரிக்கை இல்லாதபோது ஓராண்டில் $45 மில்லியன் அபராதம் வசூல்!!

NSW மாநிலத்தில் இயங்கி வரும் அனைத்து மொபைல் வேக கமரா வாகனங்களில் கட்டாயம் "உங்களின் வாகனத்தின் வேகம் பரிசோதிக்கப்படுகிறது" என்ற எச்சரிக்கை பலகை பொருத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

Mobile Speed Camera in NSW

Mobile Speed Camera in NSW Source: Getty / CarAdvice/Getty image

ஆனால் தற்போது மாநிலத்தில் இயங்கி வரும் சுமார் 143 மொபைல் வேக கமரா வாகனங்களில் வெறும் 38 வாகனங்களில் மட்டுமே இந்த எச்சரிக்கை பலகை பொறுத்தக்கூடியதாக உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதனால் தற்போது மாநிலம் முழுவதும் எச்சரிக்கை பலகை பொருத்தப்பட்டு சுமார் 38 மொபைல் வேக கமரா வாகனங்கள் மட்டுமே இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள சுமார் 105 மொபைல் வேக கமரா வாகனங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும், அந்த மறுசீரமைப்பு ஏப்ரல் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகம் தொடர்பான சாலை விபத்துகளைக் குறைக்கும் முயற்சியில் 2020-இல் இந்த வேகம் கண்காணிக்கும் எச்சரிக்கை பலகைகள் அகற்றப்பட்டன, ஆனால் அது வேகம் தொடர்பான அபராதம் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக கூறப்பட்டது.


வேகம் கண்காணிக்கும் எச்சரிக்கை பலகைகள் அகற்றப்பட்ட மாற்றத்திற்குப் பிறகு பன்னிரண்டு மாதங்களில் $45 மில்லியனுக்கும் அதிகமான அதிவேக அபராதத் தொகை வசூலாகியுள்ளதை சுட்டிக்காட்டிய மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் Chris Minns இது ஒரு மாபெரும் அளவில் வருவாயை உயர்த்தும் திட்டம் என விமர்சித்திருந்தார்.

வேகம் கண்காணிக்கும் எச்சரிக்கை பலகைகள் அகற்றப்படுவதற்கு முன் ஒரு வருடத்திற்கு சுமார் $4 மில்லியன் டாலர்கள் குறைந்த அளவிலான வேகம் தொடர்பான அபராதங்கள் வசூலிக்கப்பட்டதாகவும் ஆனால் இந்த எச்சரிக்கை பலகைகள் அகற்றப்பட்டபின் ஒரு நிதியாண்டில் $45 மில்லியனுக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக திரு Minns தெரிவித்தார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 9 January 2023 10:00am
By Selvi
Source: SBS

Share this with family and friends