குயின்ஸ்லாந்தில் mobile phone & seatbelt கமரா மூலம் 12 மாதங்களில் $159 மில்லியன் வருமானம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள mobile phone மற்றும் seatbelt கமராக்கள் மூலம், அம்மாநில அரசுக்கு கடந்த 12 மாதங்களில் 159 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

mobile phone detection

Credit: Courtesy of PD

வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தியவர்கள் மற்றும் உரியமுறையில் ஆசனப்பட்டி அணியாதவர்களைக் குறிவைக்கும் இக்கமராக்களில் ஒரு லட்சத்தி 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறிப்பிட்ட காலப்பகுதியில் அகப்பட்டுள்ளனர்.

இவர்களில் 119,862 பேர் வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தியிருக்கிறார்கள். 52,542 பேர் ஆசனப்பட்டி அணியவில்லை அல்லது சரியானமுறையில் அணியவில்லை.
இப்புதிய தரவு அதிர்ச்சியளிப்பதாகவும், குயின்ஸ்லாந்து வாகன ஓட்டிகள் பலர் சாலை விதிகளை மீறுவதன்மூலம் தமது உயிர்களை அபாயத்திற்கு உட்படுத்துவதாகவும், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் Mark Bailey தெரிவித்தார்.

வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துவது 0.07-0.10 blood alcohol செறிவுடன் வாகனம் ஓட்டுவதற்கு ஒப்பானது என அவர் சுட்டிக்காட்டினார்.

Mobile phone மற்றும் seatbelt கமராக்கள் ஜூலை 26, 2021 இல் குயின்ஸ்லாந்து முழுவதும் செயல்படத் தொடங்கின, ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் 1 முதல்தான் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

இந்த கமராவில் அகப்படுபவர்களுக்கு $1,078 மற்றும் நான்கு demerit புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படும்.

குறித்த கமராக்கள் மூலம் திரட்டப்படும் அனைத்து வருவாய்களும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.

அக்டோபர் 31 வரையான கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய சாலைகளில் 1,196 பேர் கொல்லப்பட்டதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன - இது முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 7 December 2022 1:12pm
Updated 7 December 2022 1:21pm
Source: SBS

Share this with family and friends