மருத்துவ சிகிச்சைக்காக நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு, மெல்பன் மற்றும் பிரிஸ்பேனில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளில் மேலும் 6 பேர் விடுவிக்கப்படுகின்றனர்.
மெல்பன் Park ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐவர், மற்றும் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் என மொத்தம் 6 பேருக்கு bridging விசாக்கள் வழங்கப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நாள்முதல் இவர்கள் அனைவரும் சுமார் 8 ஆண்டுகளாக வெவ்வேறு தடுப்புமுகாம்களில் வாழ்ந்துவந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
Park ஹோட்டலிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களில் இலங்கைப் பின்னணி கொண்ட ஒருவர், சூடானிய பின்னணி கொண்ட ஒருவர் மற்றும் ஈரான் பின்னணி கொண்ட மூவர் அடங்குகின்றனர்.
குறித்த ஆறு பேரையும் விடுதலை செய்வது தொடர்பிலான அறிவித்தல் நேற்றையதினம் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்த ஒருவரும், Park ஹோட்டலிலிருந்த மூவரும் விடுதலைசெய்யப்பட்டிருந்த பின்னணியில் தற்போது மேலும் 6 பேர் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.
நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதை எளிதாக்கியிருந்த Medevac சட்டம் தற்போது மீளப்பெறப்பட்டுள்ளபின்னணியில், இதன்கீழ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்ட பல அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹோட்டல்களில் நீண்ட நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பிரிஸ்பேனிலும் ஏனையவர்கள் மெல்பன் Park ஹோட்டலிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தநிலையில், இவர்களில் பலர் கட்டம்கட்டமாக bridging விசாக்கள் வழங்கப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
தற்போது மெல்பன் Park ஹோட்டலில் சுமார் 36 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.