ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டிக்கொண்டு சாப்பிடுவது சட்டவிரோதமா? உங்கள் வாகனத்தின் கட்டுப்பாட்டை நீங்கள் இழக்காதிருக்கும் வரை அது சட்டவிரோதமானதல்ல.
McDonald's burgerஆக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட sandwitchஆக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும் போது சாப்பிடுவது சட்டவிரோதமானது அல்ல என்பது நல்ல செய்தியாக இருந்தாலும், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தால் நீங்கள் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும்.
எந்தவொரு ஆஸ்திரேலிய மாநிலத்திலோ அல்லது பிராந்தியத்திலோ, வாகனம் ஓட்டும்போது சாப்பிடுவதைத் தடைசெய்யும் குறிப்பிட்ட சாலை விதிகள் எதுவும் இல்லை. ஆனால் ஓட்டுநர் தனது வாகனத்தை சரியான முறையில் கட்டுப்படுத்துவது தொடர்பான சாலை விதிகள் உள்ளன.
நியூ சவுத் வேல்ஸில், வாகனம் ஓட்டும் போது சாப்பிட்டதால் உங்கள் காரின் கட்டுப்பாடு இழக்கப்பட்டதாக பொலிஸார் தீர்மானித்தால், அவர்கள் உங்களுக்கு $481 மற்றும் மூன்று demerit புள்ளிகள் அபராதமாக விதிக்கலாம்.
இதேபோல், விக்டோரியாவின் சாலை விதிகள் வாகனம் ஓட்டும் போது சாப்பிடுவதைத் தடை செய்யவில்லை. ஆனால் ஓட்டுநர்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்படலாம்.
விக்டோரியாவில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் குற்றத்திற்கு $444 மற்றும் மூன்று demerit புள்ளிகள் அபராதம் விதிக்கலாம்.
கவனக்குறைவாக அல்லது சரியான கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டும் குயின்ஸ்லாந்து ஓட்டுநர்கள் $575 மற்றும் மூன்று demerit புள்ளிகளை அபராதமாக செலுத்த நேரிடும்.
Northern Territory, மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACTஇலும், வாகனம் ஓட்டும்போது சாப்பிடுவதைத் தடைசெய்யும் சாலை விதிகள் எதுவும் இல்லை என்றாலும், ஓட்டுநர் தங்கள் காரின் கட்டுப்பாட்டை இழப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படலாம்.
ஒரு ஓட்டுநர் எப்போதும் தங்கள் வாகனத்தின் மீது சரியான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் பிற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக கவனமாகவும் ஓட்ட வேண்டும் என்பதால், வாகனம் ஓட்டும்போது சாப்பிடுவதைத் தவிர்த்து, உங்கள் கண்களை சாலை மீதும், கைகளை steering wheel மீதும் வைத்திருங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.