நீங்கள் சாலையோரமாக உங்கள் வாகனத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், போக்குவரத்தின் திசைக்கு எதிராக வாகனத்தை நிறுத்தாதீர்கள். ஏனெனில் இது சட்டவிரோதமானது என்பதுடன் உங்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், வாகன தரிப்பிடத்திற்கான அடையாளங்களை மீறி வாகனங்களை நிறுத்துவதற்கு, அல்லது போக்குவரத்தின் திசைக்கு எதிராக நிறுத்துவதற்கு குறிப்பிட்ட அபராதங்கள் உள்ளன.
இதன்படி உங்கள் காரை எப்போதும் சாலையின் போக்குவரத்து திசையில் நிறுத்த வேண்டும். ஆனால் 90-degree angle parkingஇல் விதிவிலக்கு உண்டு. அதேபோன்று சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தரிப்பிடங்களில் உள்ள குறியீடுகளின்படியே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
ஒரு ஓட்டுநர் வாகனங்கள் பயணிக்கும் திசையில் தனது வாகனத்தை நிறுத்த வேண்டும் எனவும், சாலை வெறுமையாக இருந்தால்கூட மற்ற வாகனங்கள் செல்லக்கூடிய திசையிலேயே அதனை நிறுத்த வேண்டும் எனவும், அனைத்து மாநில மற்றும் பிராந்திய சட்டங்கள் கூறுகின்றன.
ஓட்டுநர் தவறான திசையில் வாகனத்தை நிறுத்திவிட்டு பின் அந்த இடத்தை விட்டு வெளியேறும்போது, சாலையின் தவறான பக்கத்தில் அவர் பயணிக்க வேண்டியுள்ளதால் மற்ற வாகன ஓட்டிகளுடன் நேருக்கு நேர் மோதும் அபாயம் ஏற்படலாம் என்பதே இதற்குக் காரணமாகும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு $283 அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பள்ளி மண்டலத்தில் நடந்தால் $362 மற்றும் இரண்டு demerit புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.