வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துபவர்களைப் பிடிக்க விக்டோரியாவிலும் கமராக்கள்!

வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்தும் ஓட்டுனர்களை பிடிப்பதற்கான கமராக்கள், விக்டோரியா மாநிலத்தில் பரந்தளவில் பாவனைக்கு வந்துள்ளது.

Mobile phone detection cameras

Credit: Transport for NSW

வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துதல், செல்ஃபி எடுத்தல், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல், வீடியோக்களைப் பார்த்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கவென, உலக தரத்தில் அமைந்த சிறப்பு கமராக்கள் விக்டோரியா மாநிலத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கைபேசி பாவனையாளர்களைக் கண்டுபிடிக்கவென அதிநவீன தொழிநுட்பத்துடன் அமைந்த இக்கமராக்கள், கடந்த சில வருடங்களாக பரீட்சார்த்த முயற்சியின்கீழ் விக்டோரியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தபட்டிருந்தநிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இவை பரந்தளவில் பாவனைக்கு வந்துள்ளன.

கைபேசி பாவனையை கண்டறியும் கமராக்கள், எத்தகைய போக்குவரத்து மற்றும் வானிலைகளிலும் அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுக்கின்றன.

குறித்த கமராக்களில் எடுக்கப்படும் படத்தைவைத்து, நீங்கள் வீதியில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தீர்களா, அல்லது உங்கள் கைபேசியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தீர்களா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

வாகன ஓட்டி seatbelt அணிந்திருக்கிறாரா இல்லையா என்பதையும்கூட இதன்மூலம் கண்டறியமுடியும்.

இந்த மாதம்முதல், மாநிலம் முழுவதும் இக்கமராக்கள் செயல்பட ஆரம்பித்துள்ளபோதிலும், இன்னும் மூன்று மாதங்களுக்கு இதன் வழியாக எவ்வித அபராதமும் விதிக்கப்படாது.

சட்டத்தை மீறும் ஓட்டுநர்களுக்கு அபராதம் அல்லது demerit புள்ளிகள் விதிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்படும்.

ஆனால் இது சட்டமாக்கப்பட்டபின், குறித்த கமராக்களில் அகப்படும் வாகன ஓட்டிகளுக்கு $555 அபராதம் மற்றும் 4 demerit புள்ளிகள் தண்டனையாக விதிக்கப்படும்.

வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால், அபராதம் $1849 ஆக இருக்கலாம்.

அதேபோன்று seatbelt சரியானமுறையில் அணியவில்லை என்றால் $370 அபராதம் மற்றும் மூன்று demerit புள்ளிகள் தண்டனை விதிக்கப்படும்.

விக்டோரிய சாலை பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக, $33.7 மில்லியன் முதலீட்டில் இக்கமராக்கள் பொருத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 17 March 2023 10:40am
Updated 17 March 2023 11:12am
Source: SBS

Share this with family and friends