கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஆஸ்திரேலியாவை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கென அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று, COVID-19 pandemic event (Subclass 408) விசாவின் அறிமுகமாகும்.
Temporary Activity விசா என்றும் அழைக்கப்படும் இந்த விசாவானது, விண்ணப்பதாரர்கள் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்தால், அல்லது ஒரு முக்கிய துறையில் வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், இங்கு தங்கியிருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது.
பெருந்தொற்றுக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசாவை ரத்துசெய்துவிட்டு, வழமையான விசா நடைமுறைகளுக்குத் திரும்புவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் Subclass 408 விசா முடிவு தேதி எப்போது என்பது குறித்து SBS Hindi எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள உள்துறை அமைச்சு, இவ்விசா தற்போதும் பொருத்தமானதா என்று பரிசீலித்து வருவதாகவும், Subclass 408 விசாவின் முடிவுத் தேதி மற்றும் இயல்பான செயல்பாடுகளுக்குத் திரும்புவதற்கான முன்மொழியப்பட்ட அணுகுமுறை ஆகியவை இதில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
COVID-19 pandemic event விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய, நிரந்தர அல்லது தற்காலிக விசாக்கள் வேறு பல உள்ளன என்றும் உள்துறை அமைச்சு மேலும் கூறியது.
தற்போது, ஆஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா
உட்பட தற்காலிக விசா வைத்திருப்பவர்கள், அவர்களின் தற்போதைய விசா (வேலை உரிமைகளுடனான விசா) 90 நாட்களுக்குள் அல்லது அதற்கும் குறைவாக காலாவதியாகினாலோ அல்லது விண்ணப்பித்த 28 நாட்களுக்குள் காலாவதியாகினாலோ, COVID-19 pandemic event (Subclass 408) விசாவிற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
Subclass 408 விசா விண்ணப்பதாரர்களுக்கு பொதுவாக 12 மாதங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க விசா வழங்கப்படலாம், இருப்பினும், Temporary Graduate (Subclass 485) விசா வைத்திருப்பவர்களுக்கு, COVID-19 pandemic event விசா இரண்டு வருட காலம் தங்கியிருக்க வழிசெய்கிறது.
தற்போது நாட்டில் காணப்படும் skilled தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, Subclass 408 விசா வைத்திருப்பவர்களுக்கு, பணி வரம்பு உட்பட தடையின்றி வேலை செய்ய அனுமதிக்கும் குறைந்த கட்டுப்பாடு கொள்கையை அரசு நடைமுறைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.