நியூசிலாந்து நாட்டவர்களுக்கான குடியுரிமை
1 ஜூலை 2023 முதல் (ஆஸ்திரேலியாவின் நிதியாண்டின் தொடக்கம்), ஆஸ்திரேலியாவில் நான்கு வருடங்கள் அல்லது அதற்கு மேல் வசிக்கும் நியூசிலாந்து நாட்டவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு நேரடியாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகின்றனர். அவர்கள் இனி நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
26 பிப்ரவரி 2001 க்குப் பிறகு இங்கு வந்த சிறப்பு வகை (subclass 444) விசா (SCV) வைத்திருக்கும் நியூசிலாந்து குடிமக்களுக்கு இந்த மாற்றங்கள் பொருந்தும். நீண்டகாலமாக வசிப்பவர்கள் தங்கள் நிரந்தர வதிவிட காலத்தை backdate பண்ண முடியும்.
New Zealand stream of the Skilled Independent (subclass 189) விசா தற்போது புதிய விண்ணப்பதாரர்களுக்கு மூடப்பட்டுள்ள அதேநேரம், ஜூலை 1 அன்று நிரந்தரமாக மூடப்படும்.
பசிபிக் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு புதிய விசா
பசிபிக் நாடுகள் மற்றும் Timor Leste ஆகியவற்றிலிருந்து வரும் தகுதியுடைய குடியேற்றவாசிகளுக்கு 3,000 இடங்களை வழங்கும் புதிய விசா அறிமுகப்படுத்தப்படும்.
PEV-Pacific Engagement விசாவுக்கான இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் லாட்டரி முறை மூலம் ஒதுக்கப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஜூலை முதல் இணையவழி விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும்.
மாணவர் விசாவில் மாற்றங்கள்
ஆஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் பணிபுரியக்கூடிய மணிநேரங்கள் குறித்த புதிய வரம்பு நடைமுறைக்கு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் கல்விகற்பதற்காக வரும் மாணவர்கள், சாதாரணமாக இருவாரங்களுக்கு 40 மணிநேரங்கள்(40 hours per fortnight) மட்டுமே வேலைசெய்ய அனுமதிக்கப்படுவர். ஆனால் இக்கட்டுப்பாடு கொரோனா பரவலையடுத்து தளர்த்தப்பட்டு, வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை மணிநேரங்களும் வேலைசெய்யலாம் என்பதாக அரசு அறிவித்திருந்தது.
இச்சலுகை ஜுன் 30ம் திகதியுடன் முடிவடைந்துள்ள பின்னணியில், 2023 ஜுலை 01 முதல் வெளிநாட்டு மாணவர்கள் இருவாரங்களுக்கு 48 மணிநேரங்கள் வேலைசெய்யலாம் என்ற புதிய வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது.
அதாவது கொரோனாவுக்கு முன்னைய காலத்தில் நடைமுறையிலிருந்ததைவிடவும் 8 மணிநேரங்கள் அதிகமாக வெளிநாட்டு மாணவர்கள் பணிபுரியலாம்.
இதுஒருபுறமிருக்க subclass 485 Temporary Graduate விசா வைத்திருப்பவர்களில் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் தங்க முடியும்.
தற்போதுள்ள நடைமுறையின்படி bachelor's degree கற்கைநெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் தமது படிப்பு முடிந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிய முடியும். Master's கற்கைநெறியை மேற்கொள்பவர்கள் 3 ஆண்டுகளும், PhD மாணவர்கள் 4 ஆண்டுகளும் இங்கு தங்கியிருக்க முடியும்.
அரசு அறிவித்துள்ள புதிய மாற்றத்தின்படி bachelor's degree முடித்த மாணவர்கள் இனிமேல் 4 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரியலாம்.
Master's மாணவர்கள் 5 ஆண்டுகளும், PhD மாணவர்கள் 6 ஆண்டுகளும் இங்கு தங்கியிருந்து வேலைசெய்ய முடியும்.
இச்சலுகை 2023 ஜுலை 01 முதல் நடைமுறைக்கு வருகிறது.
Working Holiday Makers-க்கான மாற்றங்கள்
Working Holiday Makers-ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்து வேலை செய்பவர்கள், ஒரே முதலாளி அல்லது நிறுவனத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கும் சலுகையும் ஜூலை 1 ஆம் தேதியுடன் முடிவடையும். கொரோனா பரவலின்போது தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஆறு மாத வேலை வரம்பு ஜனவரி 2022 இல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.
ஆனால் ஜூலை 1 க்கு முன் மேற்கொள்ளப்படும் எந்த வேலையும் ஆறு மாத வரம்புக் காலத்திற்குள் கணக்கிடப்படாது. அதாவது, ஜூலை 1-க்கு முன் வேலை தொடங்கினால், Working Holiday Makers எந்த ஒரு முதலாளியிடமும் கூடுதல் ஆறு மாதங்கள் வரை வேலை செய்ய முடியும்.

Home Affairs Minister Clare O'Neil Source: AAP / Lukas Coch
வரவிருக்கும் குடிவரவு மாற்றங்கள் பற்றி எங்களுக்கு என்ன தெரியும்?
முன்னாள் பொதுச் சேவை அதிகாரி Martin Parkinson தலைமையிலான ஆஸ்திரேலியாவின் குடிவரவு முறைமை குறித்த மறுஆய்வின் அடிப்படையில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படலாம்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் Clare O'Neil இதுவரை இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முதலாவதாக, ஜூலை 1 முதல் ஒரு விண்ணப்பதாரர் முதலாளியிடம் இருந்து sponsorship பெறும்போது அவருக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு $53,000 ஆக காணப்பட்ட Temporary Skilled Migration Income Threshold (TSMIT) வருமான வரம்பு உயர்த்தப்படவில்லை. இது இனிமேல் $70,000 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
இரண்டாவதாக, அனைத்து skilled temporary workersக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மே 9 அன்று பெடரல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.