ஆஸ்திரேலிய Partner விசாவுக்கான காத்திருப்பு காலம் கணிசமாக அதிகரிப்பு!

புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலிய குடும்பங்கள் partner விசாக்களுக்காக காத்திருக்கும் காலப்பகுதி பல மாதங்களாக அதிகரித்துள்ளது.

Visa label

Source: AAP


ஆஸ்திரேலியாவுக்கான Partner விசா செயலாக்க நேரங்கள் குறித்த புள்ளிவிவரங்களை, தகவலறியும் உரிமையின்கீழ், உள்துறை அமைச்சிடமிருந்து The Guardian ஊடகம் பெற்றுள்ளது.

இதன்படி தற்காலிக Partner விசாவைப் பெறுவதற்கான சராசரிக் காத்திருப்பு காலம் 8 முதல் 13 மாதங்களுக்கு இடைப்பட்டதாக உள்ளதாக தரவு காட்டுகிறது. இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆறு மாதங்களாக காணப்பட்டது.

அதேநேரம் விசாவுக்கு விண்ணப்பிப்பவர் பிறந்த நாட்டைப் பொறுத்து, காத்திருப்பு காலம் சில சந்தர்ப்பங்களில் வருடங்களாக இருக்கலாம்.

Partner விசா வழங்குவதில் நிலவும் நீண்ட தாமதம் காரணமாக, பலர் தங்கள் வாழ்க்கையை முழுமையாக ஆரம்பிக்கமுடியாமல் உள்ளதாக, மனித உரிமைகள் சட்ட மையத்தின் மூத்த வழக்கறிஞர் ஜோசஃபின் லாங்பியன் தெரிவித்தார்.

கோவிட் பரவல் ஏற்படுத்திய பல சிரமங்கள், விசா நிர்வாகத்துறையில் காணப்பட்ட சிக்கல்கள், உறவுகளை நிரூபிப்பதற்கான உயர் வரம்புகள், பிற நாடுகளில் உள்ள கலாச்சார மற்றும் நிர்வாகத் தடைகள் மற்றும் ஆவணங்களை வழங்குவதில் சிலர் எதிர்கொள்ளும் சிரமங்கள் உள்ளிட்ட பல காரணங்களால், Partner விசா பரிசீலனைக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் எத்தனை விசாக்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதில் சட்டத்திற்குப் புறம்பாக இலக்குகள் அல்லது வரம்புகள் இருக்கக் கூடும் என சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் Partner அல்லது குழந்தைகளுக்கான விசாக்களின் எண்ணிக்கைகள் ஒருபோதும் வரம்புக்குட்படுத்தப்படவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவர்களின் சூழ்நிலைகளின் அடிப்படையில் புறநிலை மதிப்பீடு தனித்தனியாக மேற்கொள்ளப்படுகிறது எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், தற்காலிக விசாக்கள் (துணைப்பிரிவுகள் 820 மற்றும் 309) மற்றும் நிரந்தர விசாக்கள் (துணைப்பிரிவுகள் 801 மற்றும் 100) என நான்கு பிரிவுகளின்கீழ் Partner விசாக்கள் உள்ளன. 820 மற்றும் 801 துணைப்பிரிவுகள் ஆஸ்திரேலியாவில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கானது. மற்ற இரண்டும் வெளிநாட்டு விண்ணப்பங்களுக்கானது.

ஒருவர் Partner விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, அவர் உண்மையில் ஒரே நேரத்தில் தற்காலிக விசா மற்றும் நிரந்தர விசா என இரண்டிற்கு விண்ணப்பிக்கிறார் - தற்காலிக விசா வழங்கப்பட்டால், அந்நபருக்கு நிரந்தர விசாவை வழங்குவது குறித்து முடிவெடுக்கும் வரை இந்த தற்காலிக விசா செல்லுபடியாகும்.

உள்துறைஅமைச்சின் சமீபத்திய அறிக்கையின்படி ஆகஸ்ட் 2022 இல் 56,750 Partner விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக காத்திருந்திருக்கின்றன. ஆனால் இது முந்தைய ஆண்டில் 50 ஆயிரத்திற்கும் குறைவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share
Published 26 April 2023 1:41pm
Updated 26 April 2023 2:06pm
Source: SBS

Share this with family and friends