தடுப்பிலிருந்து 163 பேர் விடுதலை - குடிவரவு சட்டத்தின் ஓட்டையை மூட அரசு விரைகிறது!!

ஒன்றுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனைகளை ஒன்று சேர்த்து அதன் காரணமாக குடிவரவு வீசா ரத்து செய்ய முடியாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து குடிவரவு தடுப்பு முகாமில் இருந்த 163 பேருக்கு வீசாக்கள் வழங்கப்பட்டதனை அடுத்து குடிவரவு அமைச்சர் Andrew Giles குடியேற்றச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.

detention.jpg

Credit: AAP

குடிவரவு தடுப்புமுகாமிலிருந்து குற்றப் பதிவுகளைக் கொண்ட 163 பேர் விடுவிக்கப்பட்ட சட்ட ஓட்டையை மூடுவதற்கு தொழிற்கட்சி விரைந்துள்ளது.

குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 501 இன் கீழ், ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த சிறைத் தண்டனைகள் காரணமாக அவரின் வீசா ரத்து செய்யப்படக்கூடாது என்று கடந்த டிசம்பரில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 501 - 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை என வரையறுக்கப்பட்ட "கணிசமான குற்றப் பதிவு" உள்ளவர்களுக்கு குணநலன்களின் அடிப்படையில் அவர்களின் வீசாவை ரத்து செய்யும் அதிகாரங்களை குடிவரவு அமைச்சருக்கு வழங்குகிறது.

10 தனித்தனி குற்றங்களுக்காக நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நியூசிலாந்து பெண் Kate Pearsonனிற்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குடிவரவு சட்டத்தில் "கணிசமான குற்றப் பதிவு" என்று குறிப்பிடப்பட்டுள்ளதை மொத்த தண்டனைகள் என கருத்தில் கொள்ளமுடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை இரவு செனட் மதிப்பீட்டில் பேசிய உள்துறை அமைச்சகத்தின் குடிவரவுத் துறையின் இணைச் செயலாளர் Sophie Foster, நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து 163 பேருக்கு மீண்டும் வீசா வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் அதே நாளில், குடிவரவு அமைச்சர் Andrew Giles குடிவரவு சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.

முந்தைய வீசா ரத்து முடிவுகள் செல்லாததாக இருந்தால், அவை மறுமதிப்பீடு செய்யப்படும் என்ற வகையில் சட்டத்திருத்த சட்டமுன்வடிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

"ஆஸ்திரேலிய சமூகத்தைப் பாதுகாக்கும் முடிவுகளை நிலைநிறுத்துவதற்கு இது முக்கியமானது." என Andrew Giles தெரிவித்தார்.

இந்த சட்டத்திருத்தம் காரணமாக Pearson உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக செல்லுபடியாகாத கடந்தகால முடிவுகள் மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்படும்.

இந்த சட்டமுன்முடிவு எதிர்க்கட்சிகளால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் Greens மற்றும் Zoe Daniel உட்பட பல்வேறு சுயேச்சைகள் எதிர்த்தனர்.

"சட்டதிருத்தத்தில் உள்ள மறுமதிப்பீடு காரணமாக சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் மீண்டும் இணைந்தவர்கள் வலுக்கட்டாயமாக மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள்" என்று Zoe Daniel கூறினார்.

அரசு இந்த குடிவரவு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது - ஏனெனில் அதன் முந்தைய வடிவத்தில், மிகக் கடுமையான குற்றங்களுக்குத் தண்டனை பெற்ற ஒருவர் பிடிபடவில்லை ஆனால் இப்போது பல சிறிய குற்றங்களைச் செய்யும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் வீசா தானாகவே ரத்து செய்யப்படுகிறது என குடிவரவு வழக்கறிஞர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 15 February 2023 11:17am
Updated 15 February 2023 11:26am
By Selvi
Source: SBS


Share this with family and friends