அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்த அகதிகளுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து வருவதற்கு ஆளும் லேபர் அரசு வழிவகை செய்துள்ளது.
படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி வந்து அவர்களின் அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிரந்தர வதிவிட வீசாவில் உள்ளவர்கள் தங்களின் மற்றைய குடும்ப உறுப்பினர்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர விண்ணப்பித்துள்ள குடும்ப மறு இணைவு விண்ணப்பங்களை குடிவரவு திணைக்களம் பரிசீலனை செய்யும்போது குடிவரவு அமைச்சரின் வழிகாட்டுதல் 80-இன் படி அதற்கு "மிகக் குறைந்த முன்னுரிமை" வழங்கி வந்தது.
இவ்வகை விண்ணப்பங்களுக்கு "மிகக் குறைந்த முன்னுரிமை" வழங்குவதான மாற்றம் முந்தைய Coalition அரசினால் கொண்டுவரப்பட்டது.
இந்த குடிவரவு அமைச்சரின் வழிகாட்டுதல் 80 மற்றும் 83 ஆகியவற்றை நீக்கியதன் மூலம் இவ்வகை வீசா பரிசீலனை நடைமுறையில் குடிவரவு அமைச்சர் Andrew Giles மாற்றங்களை அறிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் முன்னறிவிக்கப்பட்ட இந்த முடிவு, பல்லாயிரக்கணக்கான குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கக் காத்திருக்கும் வீசா செயலாக்கத்திற்கான பாதையைத் திறக்கும் என்று அரசு மதிப்பிடுகிறது.
"நிரந்தர வீசா வைத்திருப்பவர்களுக்கான குடும்ப இணைவு பாதைகளை அரசு மேம்படுத்துகிறது, அவர்களில் பலர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக குடும்பத்திலிருந்து பிரிந்து, மனநலப் பிரச்சினைகள் அதிகமாகி அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது" என்று அமைச்சர் Andrew Giles SBS News-இடம் கூறினார்.
சிக்கலான சூழ்நிலைகளில் உள்ள தனிநபர்களுக்கான வீசாக்களை பரிசீலனை செய்யும் குடிவரவு ஊழியர்களின் எண்ணிக்கையையும் அரசு அதிகரித்துள்ளது. 20 பேர் கொண்ட தற்போதைய பணியாளர் குழு 40 ஆக இரட்டிப்பாகும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருக்கும் குடும்ப வீசா விண்ணப்பதாரர்கள் இம்மாற்றத்தினால் பெரிதும் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதேவேளை படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி வரும் படகுகளை திருப்பி அனுப்புவது என்ற வலுவான எல்லை கட்டுப்பாட்டு கொள்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Albanese அரசு தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், தற்காலிக பாதுகாப்பு வீசாக்களை நீக்குவோம் என்றும் உறுதியளித்திருந்தது.
ஆனால் அந்த வாக்குறுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என Greens கட்சியினர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை எழுப்பியுள்ளனர்.
ஆனால் அரசு வரவிருக்கும் மாதங்களில் நடவடிக்கை எடுக்க சமிக்ஞை செய்துள்ளது.
இம்மாற்றத்தை கொண்டுவருவத்தினால் அரசிற்கு பாரிய செலவு இருப்பதினால் இதற்கான அறிவிப்பு எதிர்வரும் பெடரல் நிதிநிலை அறிக்கையில் இருக்கக்கூடும் என்று குடிவரவு ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் தற்காலிக வீசாவில் உள்ள சுமார் 31,000 பேர் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.