ஆஸ்திரேலிய சாலைகளில் உங்கள் காரின் ஹார்னை எப்போது, எங்கு பயன்படுத்துவது என்ற கேள்வி இங்கு புதிதாக குடியேறிய பலருக்கு எழலாம்.
ஆஸ்திரேலியாவிலுள்ள வாகனங்களில் ஹார்ன் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயம். இருப்பினும், இதன் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது.
மேலும் ஹார்னை தவறாகப் பயன்படுத்தினால் நீங்கள் சிக்கலில் சிக்கலாம் மற்றும் அதிக அபராதமும் உங்களுக்கு விதிக்கப்படலாம். அதுமட்டுமல்ல நாட்டின் ஒரு பிராந்தியத்தில் இதற்காக சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
எனவே, ஆஸ்திரேலியாவில் உங்கள் கார் ஹார்னை எப்போது பயன்படுத்துவது சட்டபூர்வமானது என்று பார்ப்போம்.
காரின் ஹார்ன் அல்லது 'எச்சரிக்கை சாதனத்தை' சரியான முறையில் பயன்படுத்தும்விடயத்தில் அனைத்து ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிராந்தியங்களும் ஒரேமாதிரியான விதிகளைக் கொண்டுள்ளன.
அடிப்படையில், ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்கள், பாதசாரிகள் அல்லது விலங்குகள் ஏதேனும் ஒரு வழியில் ஆபத்தில் இருந்தால், உடனடி ஆபத்தை எச்சரிக்க மட்டுமே கார் ஹார்னைப் பயன்படுத்த முடியும்.
அத்துடன் வாகனத்தின் anti-theft சாதனம் அல்லது alcohol interlock சாதனத்தின் ஒரு பகுதியாக கார் ஹார்னின் பயன்பாடு சட்டப்பூர்வமானதாக கருதப்படும்.
இவை தவிர ஒரு வாகனத்தின் ஹார்னைப் பயன்படுத்துவது ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு 'ஹலோ' அல்லது 'குட்பை' சொல்ல ஒரு சிறிய toot, போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் உங்களுக்கு முன்னால் நிற்கும் கார் உடனடியாக கிளம்பவில்லை என்றால் அதைநோக்கி கோபமாக ஹார்னை அடிப்பது - ஆகியவை அனைத்தும் இதற்குள் அடங்கும்.
NSW மாநிலத்தில் உங்கள் காரின் ஹார்னை சட்டவிரோதமாக பயன்படுத்தினால், சாலை விதிகள் 2014 இன் விதிமுறை 224 இன் கீழ், $349 அபராதம் விதிக்கப்படும்.
விக்டோரியாவில் அம்மாநில சாலை பாதுகாப்பு விதிகள் 2017, விதி 224 இன் கீழ் ஹார்ன் அல்லது எச்சரிக்கை சாதனத்தை தவறாக அல்லது தேவையில்லாமல் பயன்படுத்தினால் ஒரு penalty unit அபராதம் விதிக்கப்படும். penalty unitஇன் மதிப்பு தற்போது $184.92 ஆகும்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உங்கள் காரின் ஹார்னை தேவையில்லாமல் பயன்படுத்துவதற்கான அபராதம் $253 ஆகும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு penalty unit $143.75 என்ற அடிப்படையில் அதிகபட்சம் $2875 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ACTஇல் சட்டவிரோத ஹார்ன் உபயோகத்திற்காக ஓட்டுனர்களுக்கு $208 அபராதம் விதிக்கப்படலாம்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் இதற்கான அபராதம் தற்போது $50 என குறிப்பிடப்படுகிறது .
டாஸ்மேனியாவில் உங்களுக்கு $135.75 அபராதம் விதிக்கப்படும்.
உங்கள் காரின் ஹார்னை சட்டவிரோதமாக பயன்படுத்துவதற்கு NT பிராந்தியம் கடுமையான அணுகுமுறையை எடுக்கிறது. அதாவது அதிகபட்சம் 20 penalty unit (மதிப்பு $3240) மற்றும்/அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.