உங்கள் வாகனத்தில் நீங்கள் ஏற்றிச்செல்பவர்கள் மது அருந்திக்கொண்டிருக்கிறார்கள் என்றால், ஓட்டுநராக அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாமா என்று யோசித்திருக்கிறீர்களா?
இது நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் மற்றும் குறித்த பயணி காரில் எங்கு இருக்கிறார் என்பதைப் பொறுத்தது.
ஏனெனில் சில சூழ்நிலைகள் மற்றும் இடங்களில் இது சரியாக இருக்கலாம், மற்ற அதிகார வரம்புகளில் அபராதங்கள் கடுமையாக இருக்கலாம்.
விக்டோரியா மாநிலத்தைப் பொறுத்தவரை காரிலுள்ள பயணிகள் மது அருந்த தடை விதிக்கப்படவில்லை என்றபோதிலும், குடிபோதையில் பயணிப்பவர்கள் ஓட்டுநரின் கவனத்தை சிதறடிக்கலாம் என்பதால், பயணிகள் மது அருந்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ளும் நபரின் அருகில் அமர்ந்திருக்கும் போது, நீங்கள் மது அருந்தியிருக்கவோ அல்லது காரினுள் அருந்தவோ கூடாது என்று சட்டம் கூறுகிறது.
நியூ சவுத் வேல்ஸில், காரில் பயணிக்கும் போது பயணிகள் மது அருந்தக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. மேலும் மது அருந்திவிட்டு, அல்லது மது அருந்திக் கொண்டிருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற வெளிப்படையான கட்டுப்பாடுகள் எதுவும் ஓட்டுநர்களுக்கு கிடையாது.
ஆனால், நீங்கள் பொதுப் போக்குவரத்தில் (ரயில், பேருந்து, படகு அல்லது டாக்ஸி) செல்லத் திட்டமிட்டால், சவாரி செய்யும் போது மது அருந்துவதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை - மேலும் நீங்கள் திறந்த மதுபானக் கொள்கலனை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை மீறுபவர்களுக்கு $1100 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் பயணிகள் காரில் குடிப்பது பற்றி குறிப்பிட்ட சட்டங்கள் இல்லை.
குயின்ஸ்லாந்தில், பொது இடங்களில் வாகனத்தில் அமர்ந்தபடி மது அருந்தினால் அபராதம் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவில், காரில் செல்லும்போது மது அருந்தினால் பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் $2000 வரை அபராதம் விதிக்கப்படும். party பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
ஒரு பயணியாக காரில் மது அருந்துவது தொடர்பாக Nothern Territory-இல் குறிப்பிட்ட விதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
டாஸ்மேனியா மற்றும் ACT ஆகியவை கார்களில் மதுபானம் அருந்துவது தொடர்பான சட்டங்களைக் கொண்டுள்ளன. ஓட்டுநரைப்போலவே பயணிகளும் காரில்செல்லும்போது மதுபானம் உட்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் திறக்கப்பட்ட நிலையில் உங்களிடம் மதுபான கொள்கலன்கள் இருக்கக்கூடாது.
இது உங்களுக்கான தனிப்பட்ட சட்ட ஆலோசனை அல்ல. மேலும் அறிந்துகொள்ள உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தில் உள்ள சாலைகள் ஆணையத்தை தொடர்புகொள்ளவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.