ஆஸ்திரேலிய சாலைகளில் இடம்பெறுகின்ற விபத்துகள் அதிகரித்துவரும் சூழலில், இதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்று ஸ்மார்ட்போன்களினால் ஏற்படும் கவனச்சிதறல் ஆகும்.
வாகனம் ஓட்டும்போது நமது ஃபோனைத் தொட முடியாது என்ற சட்டம்பற்றி நாம் தெளிவாக அறிந்துள்ளோம் என்றபோதிலும், ஹெட்ஃபோன் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கலாம்.
மிகச்சின்னதான airPods-இலிருந்து ஒரு பெரிய over-ear mufflers வரை, ஏராளமான ஓட்டுர்கள் தங்கள் ஃபோன் அழைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும், இசையைக் கேட்பதற்குமென பயன்படுத்துகிறார்கள்.
எனவே, ஹெட்ஃபோன்களுடன் வாகனம் ஓட்டுவது உண்மையில் சட்டபூர்வமானதா?
எளிமையாகச் சொன்னால், ஆம். ஆனால் வாகனம் ஓட்டும்போது ஹெட்ஃபோன் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் எதுவும் இல்லை என்றாலும், சில முக்கிய விதிவிலக்குகள் உள்ளன.
நீங்கள் வாகனம் ஓட்டும்போது ஹெட்ஃபோன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், வாகனத்தின் மீது உங்கள் கட்டுப்பாடு முழுமையாகவும் சரியாகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் சென்றுகொண்டிருக்கும் சாலையில், உங்களுக்குப் பின்னால் எழுகின்ற சத்தங்கள், குறிப்பாக ஆம்பலன்ஸ், பொலீஸ் வாகனம் அல்லது சக வாகன ஓட்டியின் எச்சரிக்கை ஒலி போன்றவை உங்களுக்கு கேட்கவில்லை என்றால், நீங்கள் ஒரு L-Plate ஓட்டுநராக அல்லது P-Plate ஓட்டுநராக இருந்தால், அல்லது கார் விபத்துக்கு ஹெட்ஃபோன் பங்களித்ததாகக் கண்டறியப்பட்டால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
New South Wales
ஒரு ஓட்டுநர் ஹெட்ஃபோன் பயன்படுத்தும்போது, அவரது வாகனம் சரியான கட்டுப்பாட்டில் இல்லை என்று பொலிஸ் கண்டறிந்தால், அவருக்கு $481 அபராதமும் மூன்று demerit புள்ளிகளும் விதிக்கப்படலாம்.
School zone என்றால் இது $603 ஆகவும், நான்கு demerit புள்ளிகளாகவும் அதிகரிக்கிறது.
நீங்கள் ஹெட்ஃபோன் வழியாக அழைப்புகளை மேற்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள, அல்லது ஆடியோவை இயக்க உங்கள் ஃபோனைப் பயன்படுத்தினால், கூடுதல் அபராதங்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.
NSW சாலை விதி 300ன் கீழ், மொபைல் ஃபோன்கள் வாகனத்தில் பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே ஹெட்ஃபோன் வழியாக அழைப்புகளை மேற்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ ஆடியோவை இயக்கவோ முடியும். ஆனால் எந்த நேரத்திலும் ஓட்டுநர் தனது ஃபோனை தொடமுடியாது.
ஹெட்ஃபோன்களை அணிந்துகொண்டு சட்டவிரோதமாக தங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்துபவர்களுக்கு $362 அபராதம் மற்றும் ஐந்து demerit புள்ளிகள் விதிக்கப்படும். இது ஒரு school zone என்றால் அபராதம் $481 ஆக உயரும்.
கூடுதலாக, L-Plate ஓட்டுநர்கள் மற்றும் P-Plate ஓட்டுநர்கள் எந்த சூழ்நிலையிலும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஆடியோ செயல்பாடுகளைச் செய்யவோ, மொபைல் ஃபோனை அல்லது ஹெட்ஃபோன்களை பயன்படுத்த முடியாது.
விக்டோரியா
சட்டவிரோத ஃபோன் உபயோகத்துடன் தொடர்புடைய ஹெட்ஃபோன் பயன்பாட்டிற்கான அபராதம் $555 மற்றும் நான்கு demerit புள்ளிகள்.
குயின்ஸ்லாந்து
சட்டவிரோத ஃபோன் உபயோகத்துடன் தொடர்புடைய ஹெட்ஃபோன் பயன்பாடு மற்றும் கவனக்குறைவாக அல்லது சரியான கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு $575 வரை அபராதம் மற்றும் மூன்று demerit புள்ளிகள் தண்டனை விதிக்கப்படும்.
L-Plate மற்றும் P-Plate ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனையோ அல்லது அதனுடன் தொடர்புடையதாக ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தினால் $1078 அபராதம் மற்றும் நான்கு demerit புள்ளிகள் அறவிடப்படும்.
மேற்குறிப்பிட்ட மாநிலங்களைப் போலவே ஆஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களிலும்கூட வாகனம் ஓட்டும்போது ஹெட்ஃபோன் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் எதுவும் இல்லை என்றாலும், ஹெட்ஃபோன் பயன்படுத்தும்போது, வாகனம் சரியான கட்டுப்பாட்டில் இல்லை என்று பொலிஸ் கண்டறிந்தால், அபராதம் விதிக்கப்படும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.