எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நடவடிக்கை துறையானது மாநிலத்தின் வணிக கங்காரு அறுவடை திட்டம் மற்றும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்திற்கான அனுமதி திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி இறைச்சிக்காக கொல்லப்படக்கூடிய grey கங்காருக்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 166,730 ஆக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 30% அதிகமாகும்.
நில உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் கங்காருக்களை சுடுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 19 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 69,600 கங்காருக்கள் இந்த நோக்கத்திற்காக கொல்லப்படலாம்.
மொத்தத்தில் இந்த ஆண்டு கொல்லப்படக்கூடிய கங்காருக்களின் மொத்த ஒதுக்கீடு 27 வீதத்தினால் அதிகரித்துள்ளது - 2022 இல் இவ்வெண்ணிக்கை 185,850 ஆக காணப்பட்டநிலையில், இவ்வாண்டு 236,350 ஆக அதிகரித்துள்ளது.

Kangaroo Source: SBS
குறித்த கணக்கெடுப்பில் மாநிலம் தழுவிய grey கங்காருக்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக மதிப்பிடப்பட்டது. இதன்கீழ் அழிக்கப்படக்கூடிய கங்காருக்களின் வீதம் 10% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வான்வழி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டதை விட, விக்டோரியாவின் காடுகள் இல்லாத பகுதிகளில் grey கங்காருக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 24% அதிகரித்துள்ளதாகவும், ஏழு அறுவடை மண்டலங்களில் ஐந்தில், குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது எனவும் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நடவடிக்கை துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் கங்காருக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் எத்தனை கங்காருக்கள் இறந்தன என்பது தெரியாது என்றபோதிலும் விக்டோரிய அரசு இவ்வாண்டு மேலதிகமாக 27% கங்காருக்களைக் கொல்வதற்கு அனுமதி அளித்துள்ளமை தவறான விடயம் என, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Animal Justice party MP Georgie Purcell விமர்சித்துள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.