ஆஸ்திரேலியாவின் பதின்மூன்றாவது பெரிய கட்டுமான நிறுவனமான Porter Davis Homes, திடீரென திவால் நிலையை அடைந்துள்ளதையடுத்து, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து முழுவதும் 1700 கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
470 பணியாளர்களைக் கொண்ட Porter Davis கட்டுமான நிறுவனம், இந்த நிதியாண்டில் $555 மில்லியன் வருவாய் ஈட்டுவதாக கணிக்கப்பட்டுள்ளபோதிலும், இந்நிறுவனத்திற்கு எவ்வளவு கடன் நிலுவையில் உள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் Porter Davis குழுவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட குயின்ஸ்லாந்தில் உள்ள Englehart Homes என்ற சிறிய துணை நிறுவனமானது பாதிக்கப்படாது என்றும், அது தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர Porter Davis நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து கட்டுமானப்பணிகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் தற்போது 1500க்கும் மேற்பட்ட வீடுகளையும், குயின்ஸ்லாந்தில் 200 வீடுகளையும் கட்டும் பணியை Porter Davis நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுடன் 779 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள அதேநேரம் இவர்களுக்கான கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிறுவனத்தின் சரிவுக்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் தொடர்வதாகவும், அதிகரித்து வரும் செலவுகள், விநியோகச் சங்கிலி தாமதங்கள், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் 2023 இல் புதிய வீடுகளுக்கான தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவை, இந்நிறுவனத்தின் பணப்புழக்கத்தை பாதித்தமையே இதன் சரிவுக்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கொரோனா பரவலின் பின்னர் ஆஸ்திரேலியாவில் கட்டுமான நிறுவனங்கள் பல தொடர்ச்சியாக முடக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 12 கட்டுமான நிறுவனங்கள் திவாலாகியுள்ளன.
மார்ச் மாத ஆரம்பத்தில் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் ACTயில் பல கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வந்த பிரபல நிறுவனமான PBS Building திவாலானது.
அதேபோல கடந்த பெப்ரவரி மாதம் நியூ சவுத் வேல்ஸின் EQ Constructions, பெர்த்தின் Hamlen Homes மற்றும் விக்டோரியாவின் Hallbury Homes ஆகிய மூன்று நிறுவனங்கள் திவாலாகின.
நியூ சவுத் வேல்ஸை தளமாகக்கொண்ட கட்டிட நிறுவனமான Ajit Constructions அதன் வர்த்தகக் கடன் வழங்குநர்களில் ஒருவரான Boral Resources இன் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் முடக்கப்பட்டது.
இதுதவிர விக்டோரியாவின் Delco Building Group, குயின்ஸ்லாந்தின் National Construction Management, நியூ சவுத் வேல்ஸின் Allworks Building Pty Ltd ஆகிய நிறுவனங்களும் கடந்த மாதத்தில் திவாலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.