நவுறு தடுப்புமுகாம் பாதுகாப்பு நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு $750,000 செலவிடும் ஆஸ்திரேலியா

நவுறு தடுப்புமுகாம் பாதுகாப்பு மற்றும் அத்தீவில் வாழும் அகதிகளின் பராமரிப்பு பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு சுமார் ஏழரை லட்சம் டொலர்களுக்கு மேல் பணம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

File image of Nauru

Source: Getty / Getty Images

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Management and Training Corporation என்ற நிறுவனமே, இரண்டுமாத ஒப்பந்தத்தின்கீழ், நவுறு தடுப்புமுகாம் பாதுகாப்புப் பணிக்கென நியமிக்கப்பட்டுள்ளது.

நவுறுவில் தற்போது 110 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மாத்திரமே வாழ்ந்துவருகின்ற பின்னணியில், குறித்த நிறுவனத்திற்கு இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 47.3 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

இந்நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அமெரிக்க சிறைகள் மற்றும் தடுப்புமையங்களிலிருந்தவர்களை நடத்திய விதம் தொடர்பில் முன்னைய காலங்களில் பல விமர்சனங்கள் எழுந்திருந்ததுடன், நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சமூகத்தில் - வீடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் அங்குள்ள தடுப்பு மையத்தில் வசிக்கவில்லை - அது காலியாக உள்ளது.

ஆனால் எதிர்காலத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுறு தீவுக்கு அனுப்பப்படும்பட்சத்தில், அவர்களைப் பராமரிப்பதற்கான தயார் நிலையில் இத்தடுப்புமுகாம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நவுறுவில் உள்ள அகதிகள் நியூசிலாந்தில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இதுவரை 16 பேர் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்குள்ள பலர் நீண்டகால உடல் மற்றும் மனநல நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதாகவும், இதனால் நியூசிலாந்தில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பிப்பது கூட கடினமாக்கியுள்ளதாகவும், அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்புமையம் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு அது மூடப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு கடல் கடந்த செயலாக்க மையமாக நவுறு மாத்திரமே உள்ளது.

மனுஸ் தீவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,900க்கும் அதிகமானோருக்கு $70 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டை ஆஸ்திரேலிய அரசு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 26 October 2022 12:14pm
Updated 26 October 2022 1:39pm
Source: SBS

Share this with family and friends