ஆஸ்திரேலியாவில் கல்விகற்பதற்காக வரும் மாணவர்கள், சாதாரணமாக இருவாரங்களுக்கு 40 மணிநேரங்கள்(40 hours per fortnight) மட்டுமே வேலைசெய்ய அனுமதிக்கப்படுவர்.
ஆனால் இக்கட்டுப்பாடு கொரோனா பரவலையடுத்து தளர்த்தப்பட்டிருந்தது.
பலதுறைகளில் பணியாளர் பற்றாக்குறை காணப்பட்டதால், வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை மணிநேரங்களும் வேலைசெய்யலாம் என்பதாக அரசு அறிவித்திருந்தது.
இச்சலுகை எதிர்வரும் ஜுன் 30ம் திகதியுடன் முடிவடையவுள்ள பின்னணியில், 2023 ஜுலை 01 முதல் வெளிநாட்டு மாணவர்கள் இருவாரங்களுக்கு 48 மணிநேரங்கள் வேலைசெய்யலாம் என்ற புதிய வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது.
அதாவது கொரோனாவுக்கு முன்னைய காலத்தில் நடைமுறையிலிருந்ததைவிடவும் 8 மணிநேரங்கள் அதிகமாக வெளிநாட்டு மாணவர்கள் பணிபுரியலாம்.

SydneyConstruction Credit: Tempura/Getty Images
இதுஒருபுறமிருக்க குறிப்பிட்ட சில துறைகளில் கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் கற்கைநெறி முடிவடைந்ததன்பின்னர், அவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பணி உரிமைகள் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இச்சலுகை 2023 ஜுலை 01 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆஸ்திரேலிய உயர்கல்வி வழங்குநர்களிடமிருந்து பட்டம்பெற்ற மாணவர்கள் அதிக வேலை உரிமைகளைப் பெறுவதற்கு உதவும் தொழில்களின் பட்டியலும் அதற்குரிய தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தொழிலாளர் பற்றாக்குறை பாரியளவில் காணப்படும் துறைகளில்(குறிப்பாக சுகாதாரம், கற்பித்தல், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில்) கல்விகற்ற மாணவர்கள், தமது படிப்பு முடிந்தபின்னர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிவதற்கான காலம் மேலும் 2 ஆண்டுகளால் அதிகரிக்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Home Affairs Minister Clare O’Neil (right) and Member for McMahon and Minister for Climate Change and Energy Chris Bowen. (Representative Image) Source: AAP / AAP / DEAN LEWINS/AAPIMAGE
அரசு அறிவித்துள்ள புதிய மாற்றத்தின்படி bachelor's degree முடித்த மாணவர்கள் இனிமேல் 4 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரியலாம்.
Master's மாணவர்கள் 5 ஆண்டுகளும், PhD மாணவர்கள் 6 ஆண்டுகளும் இங்கு தங்கியிருந்து வேலைசெய்ய முடியும்.
அதிக ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பானது, பல வெளிநாட்டு மாணவர்கள் இங்கு நிரந்தர வதிவிட உரிமைபெறுவதற்கான வாய்ப்பைத் திறந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்தச் சலுகையானது தொழிலாளர் பற்றாக்குறை காணப்படும் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.