ஆஸ்திரேலிய அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும் விடயம்! விரைவில் இறுதிமுடிவு!!

நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கான இறுதி ஒப்பந்தம் 'அடுத்த சில வாரங்களுக்குள்' எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Refugees on Nauru

Source: AAP

Highlights
  • வருடமொன்றுக்கு ஆஸ்திரேலிய தடுப்புமுகாம்களிலுள்ள 150 அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்தது.
  • இச்சலுகைக்கு ஆஸ்திரேலிய அரசு கொள்கையளவில் இணங்கியிருந்தது.
  • இவ்விடயம் தொடர்பில் அடுத்த சில வாரங்களுக்குள் இறுதிமுடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியேற்றுவதற்கான திட்டத்திற்கு, ஆஸ்திரேலியா 'கொள்கையளவில்' இணக்கம் தெரிவித்திருந்த பின்னணியில், இது குறித்த இறுதி முடிவு அடுத்த சில வாரங்களுக்குள் எட்டப்படும் என உள்துறை அமைச்சின் செயலர் Mike Pezzullo, அண்மையில் செனட் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இச்சலுகை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாகவும், ஆஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern பல தடவை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் நியூசிலாந்தின் சலுகையை ஏற்றுக்கொண்டால் அது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும், ஆஸ்திரேலியா வருவதற்கான backdoor-பின்வாசலாக நியூசிலாந்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் ஆஸ்திரேலிய அரசு மறுத்துவந்தது.

நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக Karen Andrews, பொறுப்பேற்றபின் அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்துவது தொடர்பில் அந்நாட்டுடன் பேச்சுக்களை ஆரம்பித்ததையடுத்து இவ்விடயம் விரைவில் சாத்தியமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் அகதிகள் அந்நாட்டு குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை பெற்றவுடன் அதைப்பயன்படுத்தி மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவதற்கு இடமளிக்கக்கூடாது என்ற விடயம் உட்பட இன்னும் சில அம்சங்களில் இரு நாடுகளும் இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் இழுபறி காணப்பட்டது.

பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறது என உள்துறை அமைச்சின் செயலர் Mike Pezzullo குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த விவகாரம் மீதான பேச்சுக்கள் மீளவும் ஆரம்பித்து சில வாரங்களுக்குள் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 3 March 2022 12:20pm
Updated 3 March 2022 12:38pm

Share this with family and friends