கடல் நீர் மட்டம் உயர்வதால் கடலில் மிக ஆழத்திலுள்ள நீரின் சுழற்சி (circulation of deep ocean water) யின் வேகம் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கடல் நீர் மட்டம் உயர்ந்து கடலில் மிக ஆழத்திலுள்ள நீரின் சுழற்சியின் வேகம் பாதிக்கப்படுவதால் காலநிலை மாற்றங்கள் துரிதமடைவதாகவும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆராய்ச்சிகள் மேலும் தெரிவிக்கின்றன.
University of NSW ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் Nature என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகளின் படி, கடலின் மிக ஆழத்திலுள்ள நீரின் சுழற்சி எவ்வளவு வேகமாக நிகழ்கிறதோ அதற்கமையவே கடலின் அடிப்பரப்பிலுள்ள ஊட்டச்சத்துக்கள் கடல் வாழ் உயிரினங்களின் தேவைக்காக கடலின் மேற் பரப்பிற்கு கொண்டுவரப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

A group of Adelie penguins rest on vivid blue ice. Antarctica Source: Moment RF / David Merron Photography/Getty Images
Fossil fuels என்ற புதைபடிவ எரிபொருள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக நிகழ்வதும் இதன் பிரதான பாதிப்பாக புவிவெப்பம் அதிகரிப்பதும் இதற்கான அடிப்படை காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன. கடல் ஆழத்திலுள்ள நீரின் சுழற்சி வேகம் குறையும் போது ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடல்வாழ் உயிரனங்களைப் பாதுகாத்து வந்த eco system -சூழல் மண்டலம், நிலைகுலைந்து போகும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சூழல் மண்டலம் நிலைகுலைந்து போகும் மாற்றங்கள் முன்னர் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்தன என்றும் ஆனால் இப்போது சில தசாப்தங்களுக்குள்ளேயே நிகழ்கின்றன என்றும் இந்த ஆராய்ச்சிகளுக்குத் தலைமைதாங்கிய Australian Research Council’s Centre for Excellence in Antarctic Science நிறுவனத்தின் துணை பணிப்பாளர் பேராசிரியர் Mathew England தெரிவித்திருக்கிறார்.
ஆண்டுக்கு 250 trillion டன், உப்பும் பிராணவாயுவும் செறிந்த குளிர்ந்த நீர் தென்துருவத்தில் சொரியப்படுகிறது. இந்த பகுதியை கடலின் சுவாசப்பை oceans lungs என்று விஞ்ஞானிகள் வர்ணிக்கிறார்கள். இந்த குளிர் நீர் உருவாக்கும் வேகமான சுழற்சி காரணமாக பிராணவாயு இந்திய, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் சமுத்திரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சுழற்சி வேகம் குறையும்போது கடலுக்கடியில் சுமார் 4000 மீட்டருக்கு அடியிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அங்கேயே தங்கிவிடுவதாகவும் இதனால் கடலின் மேற்பரப்பில் வாழக்கூடிய கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க வாய்ப்பில்லை என்றும் CSIRO வின் research team leader Dr. Steve Rintoul கூறுகிறார். அத்தோடு, நீரின் அடர்த்தியும் குறைவதால் கடல் நீரின் மிக ஆழமான பகுதி வெப்பமடைவதாகவும் பனிக்கட்டிகள் இதன் காரணமாக தென்துருவப்பகுதியிலும் வடக்கே Greenland பகுதியிலும் வேகமாக கரைந்துபோவதாகவும் இவர் கூறுகிறார்.
பூகோள ரீதியாக புவிவெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, தென்துருவத்திலுள்ள பனிக்கட்டிப் பாறைகள் வேகமாக உருகத்தொடங்கும்; ஆனால் அந்த வேகம் கடலுக்கடியில் இருக்கும் நீரின் சுழற்சியில் ஏற்படாது என்பதே விஞ்ஞானிகளின் முடிவாகும். அதே நேரத்தில் கடலின் மிக ஆழமான பகுதியில் நீரின் சுழற்சி வேகம் குறையும்போது, பூமி ஒரு கிரகம் என்ற வகையில் அதன் மழை கற்றைகள் rain bands சுமார் 1000 கி மீட்டர் தூரத்திற்கு நகரும். இதனால் பூமத்திய ரேகைக்கு தெற்கில் உள்ள நாடுகளில் மழைவீழ்ச்சி பாதிக்கப்படும் என்றும் பூமத்தியரேகைக்கு வடக்கில் உள்ள நாடுகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்றும் பேராசிரியர் Mathew England கூறுகிறார்.

Massive Blue iceberg in Antarctica Source: Moment RF / David Merron Photography/Getty Images
தென்துருவ ஆழ்கடல் பகுதியில் இதற்கு முன்னர் நிகழும் மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்படாத நிலையில் தற்போதைய high resolution ocean model அடிப்படையிலான ஆய்வு மிகப் பிரதானமானது என்று பேராசிரியர் Mathew England கருதுகிறார். இது மிகப்பிரதானமாக தென்துருவ ஆழ்கடல் பகுதியை உள்ளடக்கிய ஆய்வு என்ற போதும் இந்த ஆய்விவிலிருந்து பெறப்பட்டுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும்போது தென்துருவத்தில் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் பூகோள மட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே அவரது கணிப்பாகும். வெப்பம், காற்றின் திசை என்பன மாறுவதால் ஆழ்கடல் நீரின் சுழற்சியின் வேகம் குறைவதன் காரணமாக பரந்துபட்ட பாதிப்புகள் சர்வதேச ரீதியாக நிகழும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் கூறுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.