விடைபெற்றார் விஜயகாந்த்! உலகெங்குமிருந்து அஞ்சலி!!

2023-12-28_18-20-41.jpg

Vijayakanth Credit: Public domain

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜயகாந்த் இன்று டிசம்பர் 28ம் திகதி காலமானார். அவருக்கு வயது 71.

நிமோனியாவுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் அவர்கள் மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சிக்கு மத்தியிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

முன்னதாக விஜயகாந்த் அவர்களது உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் பல கட்சித்தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் திரை ரசிகர்கள் என பல்வேறு தரப்புக்களிலிருந்தும் அஞ்சலி தெரிவிக்கப்பட்டுவருகிறது.

இதேவேளை விஜயகாந்த் அவர்களின் உடல் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிறந்த விஜயகாந்த், 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

1991ம் ஆண்டு வெளியான “கேப்டன் பிரபாகரன்” என்ற திரைப்படத்தின் வெற்றியே, அவருக்கு கேப்டன் என்ற பட்டத்தை பெற்று தந்தது.

150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது, எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் விடுதலை உள்ளிட்ட விடயங்களில் அதீத ஈடுபாடு கொண்ட விஜயகாந்த், விடுதலை புலிகள் தலைவர் மீது கொண்ட பேரன்பால் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியிருந்தார்.

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த இவர் அரசியலிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார்.

திரைவாழ்க்கை, அரசியல் வாழ்க்கை மற்றும் பல்வேறு சமூகப் பணிகள் என்று பல தளங்களிலும் முத்திரைபதித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற விஜயகாந்த் அவர்கள், நீண்டகாலமாக நோயுடன் போராடி வந்த நிலையில் இறுதியில் இன்று விடைபெற்றுக்கொண்டார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share
Published 28 December 2023 6:33pm
By Renuka Thuraisingham
Source: SBS

Share this with family and friends