SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
1.
READ MORE
ஆஸ்திரேலிய இசைப் பரப்பு
2.
3.
4.
6.
7.
இலங்கையிலிருந்து இங்கு குடி வந்தவர்களுக்கு “முதலில் Bataவிற்கும் பின்னர் பாடசாலைக்கும் செல்லுங்கள்” அல்லது, “பாய்ந்து வரும் சிங்கமென பலன் தருவது Durol” போன்ற விளம்பரங்கள் மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருக்கலாம். அதேபோல் தமிழ் நாட்டிலிருந்து... இல்லை முழு இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கு “போயே போச்சு” மற்றும் “பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு” போன்ற விளம்பரங்கள் இந்த விளம்பரம் நெருக்கமாகத் தெரிந்த ஒன்றாக இருக்கலாம். இந்த விளம்பரங்கள் கேட்பவர் மனதை பழங்காலத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த விளம்பரங்களை நாம் கேட்கும்போது நமது இளமைப் பிராயம், அப்பொழுது நாம் செய்தது என்ன, யாருடன் நட்பாகப் பழகி வந்தோம், எப்படியான விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருந்தோம் என்பதெல்லாம் நமது நினைவுக்கு வரலாம். மனதில் அசை போடலாம்.
என்ன SBS தமிழ் ஒலிபரப்பில் தமிழக மற்றும் இலங்கை விளம்பரங்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா? சில ஆஸ்திரேலிய விளம்பரங்கள் இப்பொழுதும் இங்கு வாழும் மக்களுக்கு நெஞ்சில் பசுமை நினைவுகளை மீட்டெடுத்து வருகின்றன. ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சியில், அப்படியான விளம்பரங்களில் சிலவற்றை இன்று பார்க்கலாம்.
‘Louie the Fly’ என்ற ஈ முதன்முதலில், 1957ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொலைக்காட்சியில் தோன்றியது. ஆஸ்திரேலிய விளம்பரங்களில் மிகவும் அடையாளம் காணக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக Louie the Fly மாறியுள்ளது.
தொலைக்காட்சியில் அறிமுகமான இந்த விளம்பரத்தின் jingle ஐ James 'Jimmy' Joseph White என்பவர் இசையமைக்க, முதலில் Neil Williams என்பவர் பாடியிருந்தார், பின்னர் நகைச்சுவை நடிகர் Ross Higgins பாடி 1962ஆம் ஆண்டு வெளியான பின்னர் மிகவும் பிரபலமாகியது. 58 வருடங்களாக இன்றும் Louie the Fly விளம்பரங்கள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மிக நீண்ட காலமாக விளம்பரப்படுத்தப்படும் பிரச்சாரங்களில் ஒன்றாகும். ‘இதுவரை வெளியான எல்லா விளம்பரங்களிலும் சிறந்த 50 விளம்பரங்கள்’ என்ற பட்டியலில், ஐந்தாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் விளம்பர கூட்டமைப்பு 2006 ஆம் ஆண்டு, இந்த விளம்பரத்திற்கு வழங்கியுள்ளது.
ஆனால், பல ஆஸ்திரேலியர்களிடம், உங்கள் நினைவில் நின்ற விளம்பரம் எது என்று கேட்டால், முதலில் இந்த Aeroplane Jelly விளம்பரத்தையே சொல்வார்கள்.
சிட்னியின் Marrickville என்ற இடத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த Albert Francis Lenertz என்பவர் 1930 ஆம் ஆண்டில் இயற்றிய பாடலை Amy Rochelle என்பவர், ஒரு சிறுமியின் குரலில் பாடுவது போல் பாடி வெளியிட்டிருந்தார். ஆனால், Joy King என்ற ஏழு வயது சிறுமி 1938ஆம் ஆண்டு பாடி வெளியிட்ட இந்தப் பாடல் தான் இன்றும் ஆவணக் காப்பகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடல் வெளியான இரண்டு வருடங்களிலிருந்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல், சிட்னி வானொலிகளில் தினமும் நூறு முறைக்கு மேல் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தொலைக்காட்சி பிரபலமானதும், Bertie the Aeroplane என்ற கார்டூன் விமானத்துடன், Joy King அவர்களின் குரலிலேயே விளம்பரம் தொடர்ந்தது.
பல ஆஸ்திரேலியர்கள் இன்றும், Jelly என்றவுடன் Aeroplane Jelly என்று பாட ஆரம்பித்து விடுவார்கள் என்பதிலிருந்து, இந்த விளம்பரத்தின் வீச்சு, காலத்தைக் கடந்தும் பயணிக்கிறது என்பது தெரிகிறது. ஆஸ்திரேலிய அடையாளங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் Vegemite என்ற உணவுப் பதார்த்தத்தின் விளம்பரமும் முதலில் ஒலித்த நாளிலிருந்து இன்று வரை மாறாமலே இருந்து வருகிறது.
'Happy little Vegemites’ விளம்பரம் 1950களில் பதிவு செய்யப்பட்ட பல பதிப்புகள் இருந்தன. 1950ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சிட்னியில் உள்ள EMI Studiosஇல் சிறுமியின் குரலில் Betty Parker பாடிய விளம்பரம் தான் மிகவும் பிரபலமான பதிப்பு. இந்த விளம்பரத்தில், Betty Parker என்ற பாடகியின் இளைய சகோதரர்கள் Julia மற்றும் Stephen மட்டுமின்றி, அவரது மகள் Linda Marcyயின் குரலும் ஒலிக்கின்றன.
சிட்னியில் உள்ள விளம்பர நிறுவனமான J Walter Thompson என்ற நிறுவனத்தில் பணியாற்றிய Alan Weekes என்பவர் இந்த பாடலை இயற்றியிருந்தார். ஆனால், பிரபல இசைக்குழு ஒன்றின் தலைவரும் இசையமைப்பாளருமான Bob Gibson, பாடலுக்கு அணிவகுப்பு போன்ற பாணியை அமைத்ததனால்தான் இது பிரபலமடைந்தது என்று சிலர் கருதுகிறார்கள். அதன் ஆரம்ப நாட்களிலிருந்து Vegemite ஊட்டச்சத்து மதிப்புக்காகவும் குறிப்பாக குழந்தைகளின் வலுவான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்காகவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பதார்த்தத்தின் உரிமையை அமெரிக்க நிறுவனம் Kraft தற்போது கையேற்றுள்ளது. Vegemiteஇன் புதிய வடிவமொன்றை iSnack2.0 என்ற பெயரில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய போது, அந்தப் பெயர் உலகளவில் கேலி செய்யப்பட்டதுடன் திரும்பப் பெறப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் 'Happy little Vegemites’ என்ற விளம்பரப் பாடல் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் இன்னொரு சின்னமான கங்கரூவின் படத்தைத் தனது இலட்சினையாகக் கொண்ட Qantas விமான நிறுவனம் “I Still Call Australia Home” என்ற பாடலைத் தனது விளம்பரங்களில் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் தான், 1980ஆம் ஆண்டு, Peter Allen எழுதி, பாடி வெளியிட்ட பாடல் பிரபலமானது.
இன்றைய நிகழ்ச்சியில் நாம் எடுத்து வந்த இந்தப் பாடலைத் தவிர்த்த ஏனைய பாடல்கள் அனைத்தும் அறுபது வருடத்திற்கு முன் வெளிவந்தவை, இருந்தாலும் இன்றும் பிரபலமாக வாயில் முணுமுணுக்கப்படுகின்றன. அதனால் தானோ என்னவோ, இவையும் ஆஸ்திரேலிய கலாச்சாரச் சின்னங்களாகப் போற்றப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு அருங்காட்சியகங்களில் இருக்கை கொண்டுள்ளன.