ஆஸ்திரேலிய இசைப்பரப்பில் பெண்களின் குரல்கள்

Australian Soundscape: Women’s Voices: Dame Nellie Melba, Syria Lamonte, Helen Reddy

Australian Soundscape: Women’s Voices: Dame Nellie Melba, Syria Lamonte, Helen Reddy Source: Wikipedia

ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் தொடரில், சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடும் மார்ச் மாதத்தில், ஒலிப்பதிவு செய்யப்பட்ட சில பெண்கள் குரல்களைத் தொகுத்து நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


1.

2.

4.

5.

6.

7.

ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சியில், சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடும் மார்ச் மாதத்தில், ஒலிப்பதிவு செய்யப்பட்ட சில பெண்கள் குரல்களைத் தொகுப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம்.

வணிக ரீதியாக தனது குரலைப் பதிப்பித்த முதல் ஆஸ்திரேலியப் பெண்மணி Syria Lamonte  1869 ஆம் ஆண்டு சிட்னியில் பிறந்த போது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் Sarah Cohen.  1896ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் தலை நகர் இலண்டனுக்கு சென்ற இவர், 1898ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கிடையில் இலண்டனில் உள்ள The Gramophone Company என்ற நிறுவனத்தில் 21 இசைத் தட்டுகளைப் பதிவு செய்தார்.  அவர் பதிவு செய்த பாடல்களில் ஒன்று, அவர்கள் எப்போதும் என்னைப் பின் தொடர்வார்கள் என்ற பொருள்பட, “They Always Follow Me.”

இலண்டனில் உள்ள The Gramophone Company என்ற நிறுவனத்தில் தனது குரலில் பாடி, இசைத்தட்டுகளை வெளியிட்டிருக்கும் இன்னொருவர், எமது நூறு டொலர் பணத் தாளில் உருவப் படமாக இடம் பெற்றிருக்கும், Dame Nellie Melba.

மெல்பேர்ண் புறநகர் Richmondஇல் இசை ஞானம் கொண்ட குடும்பத்தில் பிறந்த Helen Porter Mitchell, தனது இசைக் கலையில் பிரகாசிக்கவென இலண்டன் மாநகரம் சென்றார்.  முதலில் அவருக்கு அங்கே வரவேற்பிருக்கவில்லை.  பாரீஸ் நகருக்குச் சென்ற இவரது திறமையை அறிந்த பிரபல இசை ஆசிரியை Madame Marchesi தனது அரவணைப்பில் இசை உலகுக்கு ஒரு நல்ல கலைஞரை அறிமுகப்படுத்தினார்.  1887ம் ஆண்டு Brussels நகரில் இவர் நடத்திய கச்சேரியைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இவரது பிரபலம் பரவ ஆரம்பித்தது. Madame Marchesiஇன் உந்துதலில் இவர் தனது மேடைப்பெயரை Nellie Melba என்று மாற்றிக் கொண்டார்.  Melbourne இலிருந்து வந்தமையால் Melba.

முதலாம் உலகப் போர் மூண்டபோது போரினால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்கென ஒரு மில்லியன் Sterling Pounds பணத்தை சேகரித்து வழங்கினார். 1918ல் இவருக்கு வழங்கப்பட்ட Dame Commander of the Order of the British Empire விருது 1927ம் ஆண்டு Dame Grand Cross என்று உயர்த்தப்பட்டது.  இலண்டனில் 1904ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி இவர் பாடி, பதியப்பட்ட ‘Chant Vénitien’ இவர் வெளியிட்ட முதல் இசைத்தட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

Dame Nellie Melbaவுடன் பல இசைக் கலைஞர்கள் இணைந்து செயற்பட்டிருந்தாலும், NSW மாநிலத்திலுள்ள Mudgee என்ற இடத்தில் 1882ஆம் ஆண்டு பிறந்த Una Bourne என்ற இசையமைப்பாளர் மற்றும் Piano இசைக்கலைஞர், Dame Nellie Melbaவின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்.  1907, 1909 மற்றும் 1912 ஆம் ஆண்டுகளில் அவரது இசைப் பயணங்களில் கூடவே Piano இசைத்தவர் Una Bourne.  Dame Nellie Melba 1920 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா முழுவதும் இசைப் பயணம் மேற் கொள்கையில், Una Bourneணும் கூடவே மேடையில் தோன்றினார்.

தனது எட்டாவது வயதிலேயே பொது நிகழ்வுகளில் Piano இசைத்த Una Bourneணின் Piano இசையை His Masters Voice நிறுவனம் பதிவு செய்து பல இசைத்தட்டுகளை வெளியிட்டுள்ளது.  

தெற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 1894ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாளன்று, அரசியலமைப்பில் மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.  முதல் தடவையாக இந்த நாட்டில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.  இந்த உரிமை நாடளாவிய அளவில் 1902ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது என்றாலும், 41 ஆண்டுகளின் பின்னர் தான் ஒரு பெண் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதல் பெண் என்ற பெருமை கொண்ட Dame Enid Lyons, Tasmania மாநிலத்தில் Burnell தம்பதியினருக்குப் பிறந்தார்.  அவரது பதினைந்தாவது வயதில், அப்போது பிரபலமடைந்து வந்த Tasmania மாநில Labor கட்சி அரசியல்வாதியான Joseph Lyonsஐ, அவரது தாயார் அறிமுகம் செய்து வைத்தார்.  Enid 17 வயதை எட்டிய போது, Joseph Lyonsற்கு 35 வயது என்றாலும், இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.  அவர்களுக்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன, அதில் ஒரு குழந்தை சிறு பருவத்திலேயே இறந்து விட்டது.

Labor கட்சியை விட்டு விலகிய Joseph Lyons, United Australia Party என்ற கட்சியில் இணைந்து அதற்கடுத்த தேர்தலில் பிரதமரானார்.  அவரது 59ஆவது வயதில், பிரதமராக இருந்த போதே, Joseph Lyons 1939ஆம் ஆண்டு இறந்தார்.  பதவியில் இருந்த போதே இறந்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் இவர் தான்.  1943ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட Enid Lyons, Tasmania மாநிலத்திலுள்ள Darwin தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகினார்.

பெரும்பாலான பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை  வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெறுகிறது.  Dame Enid Lyonsஇன் திருவுருவம் எமது 50 டொலர் பணத் தாளில் இடம்பெற்றுள்ளது.  இவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதே தேர்தலில், மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் இன்னொரு பெண் சரித்திரம் படைத்தார்.  Dame Enid Lyons 1943ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பதவியேற்றார்.  ஆனால் அதற்கு ஆறு நிமிடங்களுக்கு முன்னர், ஒரு பெண் Senator பதவியேற்றுக் கொண்டார்.

மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து, Labor கட்சியைச் சேர்ந்த Dorothy Tangney என்பவர் செனட் சபைக்குத் தெரிவாகி, சுமார் 25 வருடங்கள் தொடர்ச்சியாக செனட்டராக கடமையாற்றினார்.  முதலாவது பெண் நாடாளுமன்ற உறுப்பினரான Dame Enid Lyonsஐயும், முதலாவது பெண் செனட்டரான Dorothy Tangneyஐயும், Australia Post 1993ஆம் ஆண்டு தபால் தலைகளில் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது.

Melbourne நகரில் பிறந்து வளர்ந்த Helen Reddy என்ற பாடகர், Ray Burton என்ற Guitar இசைக் கலைஞருடன் வெளியிட்ட “I Am Woman” என்ற பாடலைக் குறிப்பிடலாம்.  இந்தப் பாடல், 1972 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட போது, அதிக வரவேற்பைப் பெறவில்லை.  ஆனால், அமெரிக்காவில் பெண் விடுதலைப் போராட்டங்கள் வலுப்பெற்ற வேளையில் இந்தப் பாடலை, தங்கள் உள்ளூர் வானொலி நிலையங்களில் ஒலிபரப்புமாறு பல பெண்கள் கோரிக்கையை முன்வைக்க, அந்த வருடத்தின் இறுதியில், மிகவும் பிரபலமான பாடல் என்ற தரத்திற்கு உயர்ந்து விட்டது.

பெண் விடுதலை இயக்கத்தின் விருப்புகள், நம்பிக்கைகள், மற்றும் வளர்ந்து வரும் வலிமையைக் குறிக்கும் ஒரு சின்னமான பாடலாக “I Am Woman” என்ற பாடல் மிக விரைவாக மாறியது.

பெண்கள் குரலில் அமைந்த ஒலிப் பதிவுகள் பல இருந்தாலும் அவற்றில் சிலவற்றை மட்டுமே இந்த நிகழ்ச்சியில் எம்மால் எடுத்து வர முடியும் என்பது நாம் அறிந்த விடயம்.


Share