ஆஸ்திரேலிய இசைப்பரப்பில் பூர்வீக மக்கள் கதைகள்

Australian Soundscape: Stories of Aboriginal and Torres Strait Islander community.  (Left) Oodgeroo Noonuccal; (Right) Yamaz Sibarud by ‘Maino of Yam’

Australian Soundscape: Stories of Aboriginal and Torres Strait Islander community. (Left) Oodgeroo Noonuccal; (Right) Yamaz Sibarud by ‘Maino of Yam’ Source: SBS Tamil

ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் தொடரில் ஒலி வடிவாகப் பதியப்பட்டுள்ள பூர்வீக மக்கள் கதைகள் சிலவற்றைத் தொகுத்து நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


1.
2.
3.
4.
5.
7.

 



 

எங்கள் வாழ்நாளில் எத்தனை கதைகள் கேட்டிருப்போம்.... எத்தனை கதைகள் நாம் பகிர்ந்திருப்போம்... அத்தனை கதைகளில் எத்தனை கதைகளை நாம் எழுத்தில் வடித்திருக்கிறோம்?  அதிகப்படியானவை வாய்மொழியாகக் கேட்டவை தாம்.  பல கதைகள் பதியப்படவில்லையே என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறதா?

ஏட்டில் எழுதப்படாமல் வழி வழியாக ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட பகுதியில், நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் இலக்கியங்கள் மனித குலங்கள் பலவற்றின் வரலாற்றில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.  பாமரர் பாடல்கள், காற்றிலே மிதந்த கவிதை, ஏட்டில் எழுதாக் கவிதை, நாடோடி பாடல்கள், வாய்மொழிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், கிராமியப் பாடல்கள், கிராமிய இலக்கியம், ஊரகப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாடோடி இலக்கியம், கதை சார்ந்த கதையாடல்கள், கதைப்பாடல்கள், தேவதைக் கதைகள், புராணக் கதைகள், சிறுவர்கள் சார்ந்த குழந்தைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், ஒலிநயப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தொழில் சார்ந்த ஏற்றப் பாடல்கள், விதைப்புப் பாடல்கள், நடவுப் பாடல்கள், அறுவடைப் பாட்டுகள், பொலிப் பாட்டுகள், நெல்குத்தும் பாடல்கள், சுண்ணம் இடிப்போர் பாடல்கள், அம்பாப் பாடல்கள், பூப்புப் பாடல்கள், திருமண எள்ளல் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், மாரடிப் பாடல்கள், கும்மிப் பாடல்கள், உடுக்கடிப் பாடல்கள், வில்லுப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாப்புரட்டுகள், வாழ்த்துகள், வசவுகள் என்று பல்வேறு வகையானவை எம் கலாச்சாரத்தில் காணப்படுகிறது.

ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சியில், பூர்வீக மக்களிடையே அப்படிப் பகிரப்பட்ட வாய்மொழி வரலாறுகளில் பதியப்பட்ட சிலவற்றை இன்று நாம் பார்க்கலாம்.

‘Maino of Yam’ என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவர், Yamaz Sibarud என்று தலைப்பிடப்பட்ட பாடலை வாத்தியக்கருவிகள் எதுவும் இல்லாமல் பாடியது பதியப்பட்டுள்ளது.

01 first few seconds

இவர் எதைப் பற்றி பாடியிருக்கிறார் என்று முழுமையான தரவுகள் பதியப்படவில்லை.  பாடல் வரிகள் மொழிபெயர்க்கப்படவும் இல்லை.  ஆனால், Torres Strait தீவுகளின் மையப்பகுதியிலுள்ள Iama (அல்லது Yam) தீவில், Alfred Cort Haddon மற்றும் CS Myers என்ற மானிடவியல் ஆய்வாளர்கள் 1898 ஆம் ஆண்டு நடத்திய கள ஆராய்ச்சியில், பதிவு செய்யப்பட்டது என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

Torres Strait தீவுகளுக்குச் சென்று, ஆய்வுகளை மேற் கொள்ளுமாறு உயிரியலாளர் Thomas Henry Huxley என்பவர் மானுடவியலாளார் Alfred Cort Haddon அவர்களை ஊக்குவித்திருக்கிறார்.  இந்தப் பயணத்தின் போதுதான், பூர்வீக குடி மக்கள் குறித்த பல்வேறு புதிய தரவுகள் மேற்குலகத்திற்குப் பகிரங்கப்படுத்தப்பட்டன.  எடுத்துக்காட்டாக, வம்சாவளி ஊடாக சமூக கட்டமைப்புகளை இந்த மானிடவியல் குழு விளக்கியிருந்தது.

இந்த ஆய்வின் போது பல ஒலிப்பதிவுகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் அவை மோசமான தரம் வாய்ந்தவை என்பது அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.  இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நாம் கூறிய தொழில் நுட்பமான மெழுகினாலான உருளைகளில் ஒலிப்பதிவு செய்யும் உபகரணங்களைப் பயன்படுத்துவதில் இந்த மானிடவியல் குழுவுக்கு அனுபவம் இருக்கவில்லை.  இருந்தாலும், Torres Strait தீவு மக்களின் அப்போதைய கலாச்சாரம் குறித்த தகவல்கள் அறிய முக்கிய ஆதாரமாக இருக்கின்றன.  1898ஆம் ஆண்டு நடத்திய ஆராய்ச்சிகளை, 1901 மற்றும் 1935ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஆறு தொகுதிகளாக Alfred Cort Haddon வெளியிட்டார்.  Torres Strait தீவு மக்கள் குறித்த ஆய்வுகளில் ஒரு முக்கிய படைப்பாக இது இன்றும் பார்க்கப்படுகிறது.

01 rest

இப்படி பூர்வீக மக்கள் பேசிய பல்வேறு மொழிகளில் பல ஒலிப்பதிவுகள் மானிடவியலாளர்களாலும் ஆர்வலர்களாலும் பதியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  பூர்வீக மக்களில் பத்து பேரில் ஒருவர் தான் பூர்வீக மொழி பேசுவதாக சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது.  எனவே, இப்படியான பழைய ஒலிப்பதிவுகள் மொழிபெயர்த்துரைக்கப்படாவிட்டால் அந்தப் பதிவுகளிலுள்ள பொருள் அழிந்து போய் விடும் என்ற காரணத்தால், பழைய ஒலிப்பதிவுகளில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் செயற்பாடுகள் சில ஆரம்பித்துள்ளன.  Northern Territory பிரதேசத்தில், Katherine என்ற இடத்திலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Kalkarindji என்ற தேசத்தில் வசிக்கும் Gurindji மூத்த பூர்வீக குடி மக்கள் பேசும் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் நோக்குடன், Dillon Miller என்பவர் ஒலிப்பதிவுகளை செய்தார்.  அப்படி செய்யப்பட்ட பதிவுகள் மொழிபெயர்ர்துரைக்கப்பட்டு ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தப்பட்டன.  அப்படி பதியப்பட்ட இந்த ஒலிப்பதிவில், Gurindji பூர்வீக குடி மக்கள் தமது குழந்தைகளை Coolaman என்ற ஒரு கூடையில் சிறுவர்களை தூக்கி செல்வது குறித்து Gurindji பூர்வீக குடி மூத்த குடிமகன் ஒருவர் கூறுவதையும் அதன் ஆங்கில மொழியர்ப்பையும் நாம் கேட்கலாம்.

அனைத்து ஆஸ்திரேலியர்களும் இந்த மண்ணின் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்வதால், அனைவரும் பூர்வீக மொழிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்று ஆர்வலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  ஆனால், எந்த மொழியைக் கற்றுக் கொள்வது என்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.  ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளை, பூர்வீக மற்றும் Torres Strait தீவு மக்கள் பேசியிருந்ததாக சில மொழியியலாளர்கள் சொல்கிறார்கள்.  வேறு சில மொழியியலாளர்கள், அந்த எண்ணிக்கை 700 என்கிறார்கள்.  பல மொழிகள் பாவனையில் இல்லாமல் போய்விட்டன.  அப்படியான சில மொழிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளன.  கன்பரா பகுதியில் பேசப்பட்ட Ngunawal (“ngu-na-wowl”) மொழி, மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிராந்தியங்களில் பேசப்பட்ட Wiradjuri ("wi-ra-jer-ree") மொழி, Gamilaraay “gir-miller-rai”) மொழி என்பனவும், பழைய எழுத்து மூலங்களைப் பயன்படுத்தி உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

எமக்குப் புரியும் வகையில் பூர்வீக மக்கள் கதைகள் சில, ஆங்கிலத்திலும் பதியப்பட்டுள்ளன.

சிட்னி நகரின் Glebe என்ற இடத்திலுள்ள Harold Park Hotel அரசியல் ஆர்வலர்கள் கூடுமிடமாக இருந்தது.  1980 ஆம் ஆண்டிற்கும் 1990ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பல காரசாரமான விவாதங்கள், மேடைப் பேச்சுகள், கவிதை வாசிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 

Oodgeroo Noonuccal என்ற ஒரு பிரபல பூர்வீக குடி அரசியல் ஆர்வலர், கலைஞர் மற்றும் கல்வியாளர் அறுபத்தாறாவது வயதில், Harold Park Hotelலில் படித்த “We are going” என்ற தலைப்பிலான கவிதையின் ஒலிப்பதிவு இது.

அவர்கள் சிறிய ஊருக்கு வந்தார்கள்

ஒரு அரை நிர்வாண இசைக்குழு அடங்கி அமைதியாகியது

அவர்களின் குலத்தில் எஞ்சியவை

அவர்கள் தங்கள் பழைய போரா மைதானத்திற்கு வந்தார்கள்

இப்போது பல வெள்ளையர்கள் எறும்புகளைப் போல விரைந்து செல்கிறார்கள்.

முகவர் வெளியிட்ட அறிவிப்பு பின் வருமாறு: “குப்பை இங்கே கொட்டப்படலாம்.”

இப்போது அது பழைய போரா மைதானத்தின் பாதியை உள்ளடக்கியது.

“நாங்கள் இப்போது, இங்கே அந்நியர்களாக மாறியிருக்கிறோம், ஆனால் வெள்ளையர் தான் அந்நியர்கள்.

எங்கள் சொந்த இடம் இதுதான், மரபு வழிகளில் நாங்கள் இங்கே வாழ்கிறோம்.

Corroboree என்ற சடங்கு நடக்கும் எங்கள் போரா மைதானம்,

எங்கள் பாரம்பரிய விழாக்கள், மூத்தவரின் சட்டங்கள்.

கனாக்காலக் கதைகள் நாங்கள் என்று பூர்வீக குடி புராணக் கதைகள் கூறின.

கடந்த காலம் நாங்கள், வேட்டை மற்றும் விளையாட்டுகள் நாங்கள், அலைந்து திரிந்தவர்களும், முகாம் அமைத்தவரும் நாங்கள்.

Gaphembah மலை மீது வீழ்ந்த மின்னல் நாங்கள்

வேகமாக, மற்றும் பயங்கரமாக,

அதனைத் தொடர்ந்து வந்த உரத்த இடியும் நாமே.

இருண்ட தடாகத்தின் மீது பரவும் அமைதியான பகல் நேரம் நாங்கள்.

முகாமில் எரியும் தீ அணைந்து போவதால் மீண்டும் ஊர்ந்து செல்லும் நிழல்-பேய்கள் நாங்கள்.

இயற்கையும் நாம் கடந்த காலமும் நாம், பாரம்பரிய வழிமுறைகள் அனைத்தும் நாம்.

அனைத்தும் இப்போது சிதறி விட்டன.

குப்பை மேடுகள் ஆகிவிட்டன, வேட்டை ஆடுவதில்லை முகத்தில் சிரிப்பு இல்லை.

கழுகு போய் விட்டது, ஈமு மற்றும் கங்காரு இந்த இடத்திலிருந்து போய்விட்டன.

போரா வளையம் போய் விட்டது.

Corroboree என்ற சடங்கு காணமல் போய் விட்டது

நாங்களும் போகிறோம்

நம்பிக்கை இழந்த ஒருவரின் கவிதையின் கசப்பான தன்மைக்கு Oodgeroo Noonuccal அவர்களின் குரல் அழகு சேர்க்கிறது.  பிரித்தானியர்கள் இவர்கள் மண்ணின் மீது கால் பதித்த நாட்களின் பின்னர் பூர்வீக மக்கள் கதைகள் பலவற்றில் சோகம் நிழலாடுகின்றன.  எழுத்தில் பல அப்போது பதியப்படாவிட்டாலும் ஒலி வடிவில் அவை கிடைக்கின்றன.  அவை எழுத்துருவில் பதியப்பட வேண்டும் என்ற முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

இதனைக் கேட்கும் போது, தமிழ் மொழியில் நாம் கேட்ட கதைகள் அனைத்தும் எழுத்தில் கிடைக்குமா என்று எண்ணத் தோன்றுகிறதா?


Share