ஆஸ்திரேலிய இசைப்பரப்பில் போர்க் குரல்கள்

Australian Soundscape: Voice of War

Australian Soundscape: Voice of War. Source: SBS Tamil

ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் தொடரில், ஆஸ்திரேலிய படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் அன்ஸாக் தினம் அவதானிக்கப்படும் ஏப்ரல் மாதத்தில், போருடன் சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவுகள் சிலவற்றைத் தொகுத்து நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


1.

2.

3.

5.

6.

7.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


ஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும் எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம்.  அன்சாக் தினம், (Anzac Day) ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 25ஆம் நாள் நினைவுகூரப்படுகிறது.  எனவே, ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சியில், போர்க்காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகளை எடுத்து வருவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம்.

முதல் உலகப் போரில் போராடுவதற்காக, 1914ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் சிட்னியில் இருந்து புறப்பட்ட Henry Miller Lanser என்பவர் குரல் தான் முதன்முதலாகப் பதியப்பட்ட ஒரு போர்வீரனின் குரல் என்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.  மோட்டார் வாகனங்களைத் திருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த Henry Miller Lanser, ஆஸ்திரேலியப் படையில் இணைந்தார்.  எகிப்தில் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு, போர்க்களத்திற்குச் சென்றுள்ளார் Henry Miller Lanser.  Lance Corporal என்ற தகுதி பெற்ற Henry Miller Lanser, Second Lieutenant என்ற தரத்திற்கு உயர்த்தப்படும் வகையில் போரில் தந்து பங்கை வகித்துள்ளார். 

Second Lieutenant Henry Miller Lanser, தனது 26ஆவது வயதில், 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஃபிரான்சில் கொல்லப்பட்டார்.  அவரது ஒலிப்பதிவு, ஆஸ்திரேலிய போர் நினைவாலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய கீதம் என்று 1984ஆம் ஆண்டு தான் “Advance Australia Fair” பிரகடனப்படுத்தப்பட்டாலும், Peter Dodds McCormick என்பவர் அதனை இயற்றிய 1878ஆம் ஆண்டு முதலே நாட்டுப்பற்று உள்ளவர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாடப்பட்டு வந்த பாடல் என்பதற்குச் சான்றாக ஒரு ஒலிப்பதிவு நம் கைகளில் கிட்டியுள்ளது.

EMI என்ற நிறுவனத்தின் ஒரு அங்கமாகிவிட்ட Zonophone என்ற நிறுவனத்தால் பதியப்பட்ட ஒலிப்பதிவு அது.  இந்த ஒலிப்பதிவு எப்போது செய்யப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை .  பதிவு செய்யப்பட்டதன் நோக்கமும் தெளிவாக இல்லை.  போர்க்காலத்தில் நிதி திரட்டுபவர்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய ஒன்றா இல்லை படையினரின் குடும்பத்தினருக்கு அனுப்புவதற்காகக் பதியப்பட்டதா இல்லை விடுப்பில் உள்ள படை வீரர்களுக்கொரு நினைவு பரிசா, அல்லது போரில் ஆங்கிலேயர்கள் தனியாகப் போரிடவில்லை என்பதை நினைவுபடுத்துவதற்கான ஆஸ்திரேலியர்களின் முயற்சியா தெரியவில்லை என்று இதனைப் பாதுகாத்து வைத்திருப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இந்த ஒலிப்பதிவில், ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பல் மூலம் எகிப்தை சென்றடைந்த படைவீரர்கள் ஆங்கிலேய படை வீரர்களை சந்திப்பது போலவும், கப்பலில் கங்கரூக்கள் பயணித்தது போலவும் கதை சொல்லப்பட்டிருக்கிறது.  இது எகிப்தில் பதிவு செய்யப்பட்டிப்பதை விட, இலண்டன் நகரில் ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள்.  வானொலி சேவைகள் அறிமுகமாவதற்கு முன்னரே இது பதியப்பட்டிருக்கிறது என்றும், ஃகிராமஃபோன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் காலமான 1920களில் இது பதியப்பட்டது என்று அவர்கள் கணித்துள்ளார்கள்.

Queensland மாநிலத்திலுள்ள Barambah என்ற இடத்திற்கு அருகில் The Ration Shed Museum என்ற அருங்காட்சியகத்தில், முதலாம் இரண்டாம் உலகப் போருக்குச் சென்ற பூர்வீக குடி மக்கள் குறித்த நிழற்படங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  Boys from Barambah என்ற கண்காட்சியை ஒழுங்கமைத்திருக்கும் Uncle Eric Law என்பவர் ABC ஊடகத்திற்கு, சில வருடங்களுக்கு முன் வழங்கிய நேர்காணலில், பூர்வீக பின்னணி கொண்டவர்களின் ஒலிப்பதிவுகள் எதுவும் கிடைக்காததற்கான ஒரு காரணத்தை சுட்டிக்காட்டுகிறார்.

மனித குலத்தில் போர் என்பது காலம் காலமாக நடந்து வருவது எமக்குத் தெரிந்த விடயம்.  மொழி, நாடு, இனம் என்று மக்கள் வேறுபட்டிருப்பது மனித குலத்தின் ஒரு பலம் என்றாலும், அந்த வேறுபாடுகளை மதிக்கத் தெரியாமல் போர் தொடுக்கப்படும்போது, ஒத்த விழுமியங்கள் உடைய மற்றைய குழுக்களும் அப்படியான போரில் இணைந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.  1939 ஆம் ஆண்டு, ஜெர்மனி அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தவுடன், பிரித்தானியா ஜெர்மனியுடம் போர் தொடுத்தது.  அந்தப் போரில் ஆஸ்திரேலியாவும் இணைந்து கொண்டது என்பதை அப்போதைய பிரதமர் Robert Menzies நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

அதற்கு இரண்டு வருடங்களின் பின்னர், ஜப்பானுடன் போர் தொடுத்துள்ளதாக அப்போதைய பிரதமர் John Curtin அறிவித்தார்.

போர் என்று அறிவித்த ஒலிப்பதிவுகள் பல ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.  போர் முடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் ஒலிப்பதிவுகள் மிகச் சிலவே கிடைத்துள்ளன.  ஆனால், போருக்குச் சென்ற படை வீரர்கள் விரைவில் வீடு திரும்புவோம் என்று, நம்பிக்கையுடன் பாடியது பதியப்பட்டிருக்கின்றன.  அவற்றில் ஒன்று, A.J. Mills, J.P. Long மற்றும் Bennett Scott ஆகியோர் எழுதிய ஒரு பாடலை Stanley Kirkby என்பவர் பாடி, முதலாம் உலகப் போர் நிகழ்ந்த காலப் பகுதியான 1915ஆம் ஆண்டு பதியப்பட்டிருக்கிறது.  தனது தாயாருக்குக் கூறுவது போல் அமைந்த இந்தப் பாட்டில், போர் முடிந்து தான் வீடு திரும்பும் போது, இசைக் குழுக்களின் இசை பின்னணியில் ஒலிக்க மக்கள் உற்சாகமாக வரவேற்பார்கள், சிறுவர்கள் ஊரின் வழியாக அணிவகுத்து வருகிறார்கள், சூரியன் மறைந்தவுடன் மணிகள் மகிழ்ச்சியாக ஒலிக்க நான் வருவேன்.  உங்கள் இதயம் வலிக்கிறது என்பது தெரிகிறது, ஆனால் உங்கள் மகன் ஒரு படை வீரன் எனவே பயப்பட வேண்டாம், நான் ஒரு நாள் திரும்பி வந்து, உங்கள் கண்ணீரை முத்தமிடுவேன் - போர் முடிந்ததும், என் அன்பான அம்மாவே.


Share