ஆஸ்திரேலிய இசைப் பரப்பு

Australian Soundscape - L: Fanny Cochrane Smith and Horace Watson,1903(Tasmanian Museum&ArtGallery); R: A man plays a didgeridoo at an Australia Day event(AAP)

Australian Soundscape - L: Fanny Cochrane Smith and Horace Watson,1903(Tasmanian Museum&ArtGallery); R: A man plays a didgeridoo at an Australia Day event(AAP) Source: SBS Tamil

இந்த நாட்டின் வியத்தகு நிலப்பரப்பு இடத்துக்கு இடம் மாறுபட்டிருக்கிறதோ, அதே போல் ஆஸ்திரேலியாவின் இசையும் மாறுபட்டுக் காணப்படுகிறது. அத்துடன், இங்குள்ள பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் போலவே இசை வடிவங்களும் தனித்துவமானது. ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலி வடிவங்களாகத் தொகுத்து எதிர்வரும் மாதங்களில் நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியாக எடுத்து வர இருக்கும் குலசேகரம் சஞ்சயன் நிகழ்ச்சியில் எதை எதிர்பார்க்கலாம் என்று அறிமுகப்படுத்துகிறார்.



 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 

2.
3.
4.
5.
6.
7.
8.
9.



இசை... இதை விரும்பாத எந்த உயிரினம் உலகில் வாழ்கிறது?  மற்றைய உயிரினங்கள் மட்டுமல்ல, நமது வாழ்வின் மிகப்பெரிய பகுதியும் இசை ஆகும்.  உண்மையை சொல்வதானால், இசை இல்லாமல் நாம் தொலைந்து போவோம்.  ஆனால், எம் மீதும் எமது கலாச்சார அடையாளத்தின் மீதும் இசை எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோமா?

அந்த நேரத்தில், கலாச்சார ரீதியாக என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய ஒரு பாடல் போன்ற எதுவும் இல்லை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  அது , மேலும் ஒரு காலப்பகுதியில் குறிப்பிட்ட ஒரு மக்கள் குழாம் எத்தகைய வாழ்க்கை முறைகளைக் கொண்டு இயங்கினார்கள் என்பதைக் கண்டறியும் ஒரு காலக்கண்ணாடியாக இசை அமைகிறது.  மேலும் பாடலின் மொழிநடை, சொற்களின் பயன்பாடு என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பாடல் எப்போது உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.  சில பழைய பாடல்களைக் கேட்கும் போது, அந்தப் பாடலை கடைசியாகக் கேட்ட வேளை நடந்த சம்பவங்கள், உணர்வுகள் என்பனவும் ஞாபகத்திற்கு வரலாம்.

பாடல்கள் மட்டுமல்ல, எந்த ஒரு ஒலிப் பதிவை நாம் கேட்டாலும் அதில் பகிரப்படும் கருத்துகளின் அடிப்படையில், அந்தக் காலப்பகுதியில் பிரபலமான விடயங்கள், மக்களின் போக்குகள், தொழில்நுட்பம், பிரபலமான உணவுகள் மற்றும் பிரபலங்கள் குறித்தும் நாம் அதிகம் சொல்லக் கூடியதாக இருக்கும்.  அவை அனைத்தும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதிகளை மறந்து விடாமல் ஞாபகத்தில் வைத்திருக்க உதவும்.

ஆஸ்திரேலியாவின் இசையை எடுத்துக் கொண்டால், இந்த நாட்டின் வியத்தகு நிலப்பரப்பு எவ்வாறு இடத்துக்கு இடம் மாறுபட்டிருக்கிறதோ..... பனி விழும் மலைப் பகுதி, ஓங்கி உயர்ந்த காடுகள், வெண் மணல் சூழ்ந்த கடற்கரை, அடிவானம் தெரியும் வரை மட்டமான தரைப்பகுதி, மனிதர் வாழ முடியாத பாலைவனப் பிரதேசம் என்று எப்படி மாறுபட்டுக் காணப்படுகிறதோ, ஆஸ்திரேலியாவின் இசையும் மாறுபட்டுக் காணப்படுகிறது.  மேலும், இங்குள்ள பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் போலவே தனித்துவமானது.

இவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து, ஆவணப்படுத்தும் வேலை பலராலும் செய்யப்பட்டாலும், அதனை முறையாக, நாட்டு மக்கள் அனைவரின் உதவியுடன் National Film and Sound Archives என்ற தேசிய திரைப்பட மற்றும் ஒலிப்பதிவுகளின் காப்பகம், 2007ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகிறது.

ஒலி வடிவங்களைப் பதிவு செய்வதற்கும் அதனை மீட்டுக் கேட்கவும் Thomas Alva Edison என்ற விஞ்ஞானி, 1877ஆம் ஆண்டில் முதன் முதலில் ஒரு கருவியை உருவாக்கினார்.  ஒலிப்பதிவு செய்ய அவர் ஒரு மெல்லிய தகட்டைப் பயன்படுத்தியிருந்தார்.  அதனைத் தொடர்ந்து, ஏழு வருட ஆராய்ச்சியின் பின்னர் Volta Laboratory என்ற ஆய்வு மையத்திலிருந்து Charles Tainter, Alexander Graham Bell மற்றும் Chichester Bell ஆகியோர் மெழுகைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்யும் கருவி ஒன்றை 1887ஆம் ஆண்டு உருவாக்கினார்கள்.  Graphophone என்று பெயரிடப்பட்ட அந்தக் கருவி உருவாக்கப்பட்டதன் ஆறு வருடங்களின் பின்னர், அந்தக் கருவியைப் பயன்படுத்தி, John James Villiers என்ற கலைஞர் piano போன்ற பக்க வாத்தியக் கருவிகளோடு Hen Convention – கோழிகளின் மாநாடு என்ற தலைப்பில் பதிவு செய்தது தான் ஆஸ்திரேலியாவில் பதியப்பட்ட முதல் குரல் என்று சரித்திரத்தில் பதிவாகியுள்ளது.

மின்சாரம் பாவனையில் இல்லாத காலம்.  அப்போது, மக்கள் எப்படிப்பட்ட பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்கான எண்ணத்தை இந்த ஒலிக்கீற்று எமக்குத் தருகிறது.

1899ஆம் ஆண்டிற்கும் 1903ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், Horace Watson என்பவர் Tasmaniaவிலுள்ள பூர்வீக மக்கள் கதைகளை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்.  அதில், Fanny Cochrane Smith என்பவர் ஆங்கிலத்திலும், தனது பூர்வீக மக்கள் மொழியிலும் தமது வாழ்க்கை முறை குறித்துப் பேசியும் பாடியும் உள்ளார்.  எமக்குக் கிடைத்த மிகப் பழமையான பூர்வீக குடி மக்கள் கதையின் ஒலிப்பதிவு இதுதான்.  

National Film and Sound Archives என்ற தேசிய திரைப்பட மற்றும் ஒலிப்பதிவுகளின் காப்பகம் ஆவணப்படுத்தி வரும் Sounds of Australia திட்டத்தில் நாம் கேட்ட இந்த இரண்டு ஒலிக்கீற்றுகளும் பேணப்படுகின்றன.  அவை தவிர 2007 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஒலி வடிவங்களைப் பரிந்துரைக்குமாறு பொதுமக்கள் கேட்கப்படுகிறார்கள்.  அவற்றிலிருந்து தெரிவு செய்யப்படும் சில ஒலிக்கீற்றுகள் அழியாதிருக்கும் வண்ணம் பேணப்படுகின்றன.  பிரபலமான ஒலிக்கீற்றுகள் மட்டுமே பேணப்படுவதில்லை என்று ஆவணக்காப்பாளர் Nick Henderson SBS செய்திப்பிரிவினரிடம் கூறியுள்ளார்.

இந்தக் காப்பகத்திலும் ஆஸ்திரேலிய தேசிய நூலகத்திலும் பேணப்பட்டு வரும் பல்வேறு ஒலிப் பதிவுகள் - ஆஸ்திரேலிய இசை வடிவங்கள், அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒலி வடிவங்கள், பாடல்கள் என்பவற்றைத் தொகுத்து எதிர்வரும் மாதங்களில் நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியூடாக ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வர இருக்கிறோம்.  


Share