கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள்

Left: Phuong Ngo / John Newman, Right: Percy Brookfield

Left: Phuong Ngo / John Newman, Right: Percy Brookfield Source: Creative Commons

ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் தொடரில், கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் குறித்து நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 

1.
2.
3.
4.
5.
6.
7.

 

உலக வரலாற்றில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.  அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன், ஜோன் கென்னடி முதல் இந்தியாவின் மகாத்மா காந்தி, ஏன் அண்மையில் ஹெய்ட்டி நாட்டின் அதிபர் என்று பல அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி அரசியல்வாதிகளும் அவர்களின் அரசியல் நிலைப்பாடு காரணமாகவோ அல்லது அரசியல் பொறாமை காரணமாகவோ கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நமது ஆஸ்திரேலியாவில் எத்தனை அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கான விடை, பதிலளிப்பவரின் பார்வையில் தங்கியிருக்கிறது.  நம் நாட்டில் இதுவரை ஐந்து அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  கடலில் நீந்தச் சென்ற பிரதமர் Harold Holt 1967ஆம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போனார் என்றாலும் அவர் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.  Pemulwuy போன்ற பூர்வீக குடி தலைவர்களும் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.  ஆனால் இந்த ஐந்து அரசியல்வாதிகளில் ஒருவரைத் தவிர மீதி நான்கு பேரும் அரசியல் காரணங்களுக்காகக் கொலை செய்யப்படவில்லை.

1875ஆம் ஆண்டில் பிறந்த Percival Stanley Brookfield என்பவர், தொழிற் சங்கத் தலைவராகவும், NSW மாநில நாடாளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியவர்.  1917ஆம் ஆண்டு Labor கட்சி சார்பில் போட்டியிட்டு மாநில நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர், இரண்டு வருடங்களின் பின்னர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  1919ஆம் ஆண்டு ஜூலை மாதம் Industrial Socialist Labor Party என்ற கட்சியில் இணைந்து தொடர்ந்து மாநில நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்தார்.  இரு பெரும் கட்சிகளும் சமமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தமையால், நாடாளுமன்றத்தில் முடிவுகள் எடுக்கப்பட இவரது வாக்கு முக்கியமாக அமைந்தது.  அதனைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் பல சட்டங்களை இயற்ற இவர் உதவினார் என்று வரலாற்றாசிரியர் Humphrey McQueen பதிந்துள்ளார்.

Humphrey McQueen கூறியது போல், இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஆனால், அவர் கொல்லப்படுவதற்கு அவரது அரசியல் நிலைப்பாடோ அல்லது அரசியல் செயல்பாடோ காரணமாக அமையவில்லை.  Broken Hill இரயில் நிலையத்தில் துப்பாக்கி தாரர் ஒருவர் கண்மூடித்தனமாக பொது மக்கள் மீது சுட்டுக் கொண்டிருந்த வேளை, E.A. Kinsela என்ற காவல்துறை அதிகாரி அவரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.  ஒரு கட்டத்தில் அவரது துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வெளியில் வரவில்லை.  அருகிலிருந்த Percy Brookfield அவர்கள் அதனைப் பழுது பார்ப்பதற்காக வாங்கி, ஏதோ செய்துவிட்டு, துப்பாக்கிதாரரை நோக்கிக் குறி வைத்திருக்கிறார்.  அப்போது, துப்பாக்கி தாரர் Percy Brookfieldஐ நோக்கி சுட்டதனால் அவர் மரணமடைந்தார்.  அந்தத் துப்பாக்கி தாரர் ரஷ்யர் என்பது அவரை மடக்கிப் பிடித்த பின்னால் தெரியவந்தது.

Albert Edward Victor Whitford என்பவர் 1877ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து, 1910ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்தார்.  ஒரு தையல் தொழிலாளராகத் தனது பணியை ஆரம்பித்தவர், 1918ஆம் ஆண்டு முதல், குயின்ஸ்லாந்து மாநில நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றினார்.  மொத்தம் நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பனான இவர், அவரது மனைவியுடன் நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்குச் சென்றிருந்த வேளை, முதலாம் உலகப் போருக்குச் சென்று திரும்பிய படை வீரர் James William Laydon என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  விசாரணையின் போது, “நான் அவரை சுட்டேன்.  நீங்கள் போருக்குச் சென்றிருந்த போது உங்கள் மனைவியை விபச்சார விடுதிக்கு ஒருவர் அழைத்துச் சென்றிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?” என்றும் “என் எதிரிகளைக் கொல்ல போரில் எனக்கு கற்பிக்கப்பட்டது; எனக்கு தீங்கு செய்யாத பலரை நான் அங்கே கொன்றேன்” என்றும் James William Laydon கூறினார்.  ஆனால், தீர்ப்புக் கூறிய நீதிபதி, “இறந்த ஒரு மனிதர் மீது அவதூறான கருத்து இது, அதை மறுக்க அவர் இங்கு இல்லை.  இதனை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை” என்று கூறி James Laydonஇற்கு ஆயுள் தண்டனை விதித்தார்.  ஏழு வருடங்கள் சிறை வாசத்தை அனுபவித்த இவர் போரினால் ஏற்படும் மன அழுத்தக் கோளாறுக்குள்ளாகியிருந்தார் என்று ஓய்வுபெற்ற படைவீரர்கள் அமைப்பு வாதாடி விடுதலை பெற்றுக் கொடுத்தது.

1876ஆம் ஆண்டு பிறந்த Hyman Goldstein என்ற அரசியல்வாதி, New South Wales மாநில நாடாளுமன்றத்தில் Eastern Suburbs தொகுதி உறுப்பினராக 1922ஆம் ஆண்டு முதல் 1925ஆம் ஆண்டு வரையும் கடமையாற்றினார்.  மீண்டும் Coogee தொகுதி உறுப்பினராக 1927ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவரது பதவிக் காலம் முடியும் முன்னரே, அதற்கடுத்த வருடம் இறந்து விட்டார்.

Prickly Pear Company என்ற நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக இருந்த இவர், அந்த நிறுவனம் செயலிழந்து போக முதலீடு செய்த பணம் அனைத்தையும் இழந்து விட்டார்.  அதற்கு, இன்னொரு முக்கிய பங்குதாரர், Thomas Ley என்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்தான் காரணம் என்று Hyman Goldstein பிரச்சாரம் செய்து வந்தார்.  1928ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள், Coogee கடற்கரையிலுள்ள பாறைகளின் நடுவே விழுந்து இறந்து கிடக்க இவர் கண்டுபிடிக்கப் பட்டார்.  இவரது எதிரியாகக் கணிக்கப்பட்ட Thomas Ley இவரது மரணத்திற்கு மட்டுமல்ல, வேறு சில வர்த்தகர்களின் இறப்புக்கும் காரணம் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொல்லப்பட்ட அரசியல்வாதிகளின் கால அட்டவணையில் Ivens François என்பவர் அண்மையில் கொல்லப்பட்டார்.  ஆஸ்திரேலியாவின் சிறப்பு அதிகாரத்திற்குட்பட்ட Norfolk Island தீவில் காணி விவகார அமைச்சராகவும் துணை முதல்வராகவும் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றிய இவர் 2004ஆம் ஆண்டு அவரது பணிமனையிலே சுட்டுக் கொல்லப்பட்டார்.  25 வயதான, மனநலம் குன்றிய இவரது மகன் தனது தகப்பனை சுடும் போது, சாத்தானின் தூதுவன் என விவரித்ததாக விசாரணையில் வெளி வந்தது.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரேயொரு அரசியல் கொலை என்று வர்ணிக்கப்படும் கொலை நிகழ்ந்தது 1994ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள்.

1946ஆம் ஆண்டு ஆஸ்திரிய யுகோஸ்லாவிய பெற்றோருக்குப் பிறந்த John Naumenko, ஆஸ்திரேலிய Labor கட்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தன் பெயரை John Newman என்று மாற்றிக் கொண்டார்.  Federated Clerks Union என்ற தொழிற் சங்கத்தின் செயலாளராக 1970ஆம் ஆண்டிலிருந்து 1986ஆம் ஆண்டு வரை கடமையாற்றிய இவர், சிட்னி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக தொழிற் துறை சட்டப் படிப்பை மேற்கொண்டார்.

1977ஆம் ஆண்டு NSW மாநில Fairfield Council உறுப்பினராக முதல் தடவை தேர்வு பெற்று அந்தப் பதவியை 1986ஆம் ஆண்டு வரை தக்க வைத்துக் கொண்டார்.  1985-86ஆம் ஆண்டுகளில் துணை மேயராகவும் கடமையாற்றினார்.  இந்தத் தொகுதியில் வியட்நாமிலிருந்து புகலிடம் கோரி வந்தவர்கள் பலர் வசித்தார்கள், இப்பொழுதும் வசிக்கிறார்கள்.  ஆனால், அந்தக் காலத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் சிலர் செயற்பட்டதை வன்மையாக எதிர்த்து John Newman பிரச்சாரம் செய்தார்.

1994ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள், இரவு ஒன்பதரை மணி போல், அவரது வீட்டிற்குள் அவர் நுழையும் போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் John Newman.

நான்கு வருடங்கள், மூன்று தள்ளுபடியான விசாரணைகளைத் தொடர்ந்து, நான்காவது விசாரணையில் அவரது அரசியல் எதிரியான Phuong Ngo, இந்தக் குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இப்பொழுதும் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.


Share