SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
1.
READ MORE
ஆஸ்திரேலிய இசைப் பரப்பு
3.
4.
5.
6.
7.
8.
9.
ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சியில், பூர்வீக மக்களின் பாடல்களை இன்று கேட்போம்.
அறுபதாயிரம் வருடங்களுக்கும் அதிகமான, தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டிருக்கும் எமது பூர்வீக மக்கள் வாய்வழியாகத்தான் தமது கதைகளைப் பகிர்ந்து வந்திருக்கிறார்கள். அதில் இசை ஒரு பெரும்பங்கு வகிக்கிறது. அந்தக் கதைகள் இப்போதும் பகிரப்பட்டாலும், பழைய ஒலிப்பதிவுகளிலுள்ள தனித்துவம் அன்றைய காலத்து வாழ்வு முறையைத் தெளிவாக எடுத்து வருகின்றன. அந்தக் கதைகள் ஆங்கிலமோ வேற்று மொழிகளோ அதிகம் கலக்கப்படாமல், பூர்வீக மொழியில் மட்டுமே அமைந்திருப்பதை நாம் கேட்கலாம்.
மூன்று பாகங்களாகப் பதியப்பட்டுள்ள அந்தப் பாடல், ஆஸ்திரேலியாவின் வட கிழக்குப் பகுதியிலிருக்கும் Arnhem Land தேசத்தின் Yirrkala என்ற இடத்தில் AP Elkin என்பவரால் 1949ஆம் ஆண்டிற்கும் 1952ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பதியப்பட்டிருக்கிறது.
மூன்று வேகங்களில் கதை சொல்லப்படுகிறது. நிலத்தில் கால் குத்தப்படும் ஓசை கேட்கிறது. கதை சொல்பவர் ஆடிக் கொண்டே கதை சொல்கிறார் என்பது அதிலிருந்து தெரிகிறது. இடையிடையே நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது. ஆகவே ஒரு வெளி இடத்தில் மற்றவர்கள் பார்வையிட, இந்தக் கதை பகிரப்பட்டிருக்கிறது என்பதுவும் தெரிகிறது. இது Manikay வடிவத்தில் அமைந்திருக்கிறது என்று இந்த ஒலிப் பதிவை ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். Yolngu மக்களின் கதைகள் பல தலை முறைகளைக் கடந்து செல்கிறது. அவை புனிதமான சடங்கு பாடல்கள், அவர்கள் வாழும் நிலத்தைப் பற்றிய பாடல்கள், அதில் வசிக்கும் தாவரங்கள், விலங்குகள், மக்கள் மற்றும் ஆவிகள் என்பவற்றைப் பற்றிய கதைகள் என்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள். Mokuy என்பது, அவர்களது நிலப்பரப்பில் எல்லா இடங்களிலும் பரந்துள்ள மூதாதையர்களின் பேய்கள் என அந்தப் பிராந்திய மக்கள் கருதுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை, வாழ்க்கை முறைகளை இந்தக் கதைகள் மூலம் சந்ததி சந்ததியாகக் கூறி வருகிறார்கள்.
கதையும் பாடலும் மாறி மாறி தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டும் பாடப்பட்டும் இருக்கும் வடிவம், எமது ஒப்பாரியை ஒத்ததாக இருக்கிறதா இல்லையா?
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகக் கொடூரமான சரித்திரப்பதிவுகளில் ஒன்று பூர்வீக பின்னணி கொண்ட குழந்தைகளை அவர்களது குடும்பங்களிலிருந்து கட்டாயமாகப் பிரித்து, தனியாக உருவாக்கப்பட்ட இடங்களில் வளர்க்கும் முறை. Stolen Generation – திருடப்பட்ட தலைமுறையினர் சந்தித்த சோகங்கள் பல பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், Archie Roach என்பவரின் இந்தப் பாடல், 1991 ஆம் ஆண்டில் சிறந்த பூர்வீக மக்களின் வெளியீடு, மற்றும் சிறந்த புதிய திறமைக்கான Australian Recording Industry Association அல்லது ARIA விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது மட்டுமின்றி திருடப்பட்ட தலைமுறையினர் குறித்த அடையாளப்பாடலாகவும் மாறியுள்ளது.
பதியப்பட்டுள்ள பூர்வீக மக்கள் பாடல்கள் எல்லாமே சோகத்தை மட்டும் வெளிப்படுத்தும் பாடல்கள் என்று நாம் எண்ணி விடக்கூடாது. ஆங்கிலேயர் தம் நாட்டில் குடியேறிய பின்னர், தமது இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்று பொருள்பட No Fixed Address என்ற இசைக் குழுவினர் வெளியிட்ட 'Wrong Side of the Road' என்ற இசைத்தட்டில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடல், ‘We Have Survived in a Whiteman’s world’என்ற பாடல்.
இந்த இசைக் குழு 1978ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் சுமார் பத்து ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக இயங்கினார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் வாழும் மற்றைய சமூகத்தினர் தம்மை நடத்தும் விதம் குறித்து எழுந்த விரக்தி இவர்களது பாடல்களில் ஒலித்ததால் அவர்கள் மிகவும் பிரபலமாக இருந்தார்கள். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த இசைக்குழு 2009ஆம் ஆண்டில் மீண்டும் இணைந்து சில கச்சேரிகளை நாடு முழுவதிலும் நடத்தியுள்ளார்கள்.
பூர்வீக குடிமக்கள் மற்றைய சமூகங்களை விட அதிகளவில் சிறைப்படுத்தப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதனை பிரச்சாரப்படுத்துவதற்கு, பிரச்சாரப் பாடல்களாகப் பாடாமல், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிரபலமாகியிருந்த Twist மற்றும் Rock n’ Roll வடிவங்களாக Warumpi என்ற இசைக் குழுவினர் பாடலாக்கியுள்ளார்கள்.
“இன்று நான் சிறையிலிருந்து வெளியேறினேன், இப்போது Papunyaவுக்குப் பயணிக்கிறேன், என் ஆசைப்பெண் அங்கு காத்திருப்பதால் நான் அவசரமாக செல்கிறேன்” என்ற வரிகளைக் கொண்ட பாடல் அவர்கள் சொல்ல வந்த செய்தியை வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறது.
பிரபலமான இசை வடிவங்களில் இன்னொன்று, country music. 1930ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பிறந்த Dougie Young என்பவர் பூர்வீக பின்னணி கொண்டவர். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்ந்த அவர் பாடிய பாடல்களை Dr Jeremy Beckett என்ற மானுடவியலாளர் 1964ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளார்.
பூர்வீக குடி மக்களுடன் ஆங்கிலேயர்கள் எந்தவித உடன்படிக்கைக்கும் வராமல், எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாமல்தான் ஆஸ்திரேலியா என்ற நாடு உருவாக்கப்பட்டது என்பது நாம் அறிந்த செய்தி. மற்றைய காலனித்துவ நாடுகளின் பூர்வீக குடி உரிமையாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எழுதப்பட்ட பாடல்களில், பாரம்பரிய Yolngu இசையையும் Rock n’ Roll இசை வடிவத்தையும் இணைத்து Yothu Yindi என்ற பிரபல பூர்வீகப் பாடகர் ‘Tribal Voice’ என்ற இறுவெட்டில் 1991ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்.
“Treaty yeah, Treaty now” என்ற இந்தப் பாடலை Yothu Yindi அவர்கள் 2000ஆம் ஆண்டு சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்ச்சியில், ஆறு பாடல்களை மட்டுமே நாம் ஒலிபரப்பியிருந்தோம். அந்த ஆறு பாடல்களும் பூர்வீக குடி மக்களுடன் தொடர்புடையவை. அந்த ஆறுமே வெவ்வேறு இசை வடிவங்களில் அமைந்தவை. அவை சொல்லும் செய்திகளும் வெவ்வேறு கருப் பொருட்களில் அமைந்திருந்தன. எண்ணற்ற இனக்குழுக்கள் வாழும் இந்தப் பாரிய நிலப்பரப்பில் இசை மட்டுமல்ல, கதைகளும் பல்வேறு வகைப்பட்டிருக்கின்றன. அவற்றை அடுத்த நிகழ்ச்சியில் கேட்போம்.