நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒரு சில அரசியல்வாதிகள் கட்சி மாறியுள்ளார்கள். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கட்சி மாறியுள்ளார்கள். சிலர் இந்த நாட்டின் எதிர்காலத்தையும் அரசின் போக்கையும் மாற்றியுள்ளனர்.
குலசேகரம் சஞ்சயன் ஆராய்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
1.
READ MORE
ஆஸ்திரேலிய இசைப் பரப்பு
2.
3.
4.
5.
6.
7.
8.
கடந்த மாதம், நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் எத்தனை அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் எத்தனை அரசியல்வாதிகள் முதுகில் குத்தப்பட்டார்கள் அல்லது மற்றவர்கள் முதுகில் குத்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.
விக்டோரிய மாநில Liberal கட்சித் தலைவராக இருந்த Michael O'Brienற்கு கடந்த வாரம் Matthew Guy சவால் விட்டதும், நியூ சவுத் வேல்ஸ் மாநில Labor கட்சிyயின் Jody McKayயின் தலைமைக்கு மே மாதத்தில் Chris Minns சவால் விட்டதும் அண்மைய செய்திகள்.
தலைமைத்துவத்திற்கான சவால்களும், தலைவர்கள் மாறுவதும் மாநிலங்களில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் நடந்துள்ளன.
2007 மற்றும் 2020 ஆண்டுகளுக்கிடையிலான 13 வருடங்களில் நாம் ஆறு பிரதமர்களையும் ஐந்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் கண்டிருக்கிறோம். 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்ததிலிருந்து Kevin Rudd (இரண்டு முறை), Julia Gillard, Tony Abbott, Malcolm Turnbull மற்றும் Scott Morrison பிரதமர்களாகியிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களாக, Brendan Nelson, Turnbull, Abbott, Bill Shorten மற்றும் Anthony Albanese கடமையாற்றியிருக்கிறார்கள்.
இப்படி அடிக்கடி நிகழ்வதற்கு, பல ஆண்டு காலமாக பழக்கத்திலிருக்கும் எம் நாட்டின் அரசியல் நடைமுறை தான் காரணம். தேர்தலின் போது நாம் ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒவ்வொரு தொகுதி மக்களும் தெரிவு செய்கிறார்கள். தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கிறார்கள்.
Kevin Rudd பிரதமராக இருந்த போது, Labor கட்சியில் இந்த நடைமுறையை மாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி கட்சி உறுப்பினர்களுக்கும் அந்தத் தெரிவில் சம பங்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி கட்சிக்குள் தலைமைத்துவத்திற்கு சவால் விடுவது ஒன்று, ஆனால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்த கட்சியையே ஒதுக்கி விட்டு வேறு கட்சிக்குப் பாய்பவர்களை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பார்த்திருக்கிறோம். இந் நாட்டில் அப்படி பரவலாக நடக்காவிட்டாலும் அப்படி கட்சி விட்டு கட்சி தாவியவர்களில் சிலர் சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் Labor கட்சியில் பெரும் பொறுப்பு வகித்த ஒருவர் இன்னொரு கட்சிக்கு மாறியிருக்கிறாரா என்று கேட்டால் ஒரே ஒருவருடைய பெயர் தான் பதிலாகக் கிடைத்திருக்கும். அவரது கதை இறுதியாக... முதலில், 1990களில் Labor கட்சியில் படிப்படியாக முன்னேறி, 2003ஆம் ஆண்டு Labor கட்சியின் கருவூல பேச்சாளாராக உயர்ந்து, பல ஆண்டுகள் பிரதமராக இருந்த John Howard ஐ தோற்கடித்து Labor அரசு நிறுவப் போகிறார் என்ற அளவிற்கு Labor கட்சியில் உயர்ந்து, கட்சித் தலைவரான Mark Latham, தேர்தலில் தோல்வி கண்டதும் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக முதலில் அறிவித்தார். பின்னர் 2018ஆம் ஆண்டுவாக்கில் Liberal Democrats கட்சியில் இணையப் போவதாக கிசுகிசுப்புகள் வெளியாகின. ஆனால், 2019ஆம் ஆண்டு அவர் One Nation கட்சியில் இணைந்து NSW மாநில One Nation கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற போது பலரும் ஏன் என்று கேட்டார்கள்.
One Nation கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராகக் கடமையாற்றும் Pauline Hanson, 1996ஆம் ஆண்டு வரை Liberal கட்சி உறுப்பினராக இருந்தார். பூர்வீக குடி மக்கள் குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அவரை கட்சியிலிருந்து வெளியேற வைத்தது. அதற்கடுத்த ஆண்டில் அவர், Pauline Hanson’s One Nation என்ற கட்சியை ஆரம்பித்தார்.
Pauline Hanson போலவே தனி ஒருவரின் கட்சி என்று ஆரம்பிக்கப்பட்ட Jacqui Lambie Network என்ற கட்சியின் Jacqui Lambie, Labor மற்றும் Liberal இரண்டு கட்சிகளிலுமே உறுப்பினராக இருந்திருக்கிறார். சுயேட்சை வேட்பாளாராக செனட் சபை தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது வீட்டை விற்று, 2013ஆம் ஆண்டில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த வேளை தான் Palmer United Party என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பணம் ஒரு பிரச்சினையாக இருந்தமையால் அவர் Palmer United கட்சி சார்பில் செனட் சபைக்குப் போட்டியிட்டார் – வெற்றி பெற்றார். ஆனால், செனட்டராக ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்யும் முன்னரே அவர் Palmer United கட்சியிலிருந்து விலகி தனது சொந்தக் கட்சியை ஆரம்பித்தார்.
ஒரு கட்சி உறுப்பினர் கட்சியை விட்டு விலகுவது நடப்பதுண்டு. ஆனால் ஒரு கட்சித் தலைவராக செனட் சபையில் அங்கம் வகிக்கும் போதே Australian Democrats கட்சியிலிருந்து விலகி, Labor கட்சியில் 1998ஆம் ஆண்டு இணைந்து கொண்டார் Cheryl Kernot. ஆனால், 2001ஆம் ஆண்டில் அவரது புதிய கட்சியான Labor கட்சி அவரை ஒரு வேட்பாளராகவே தெரிவு செய்யவில்லை என்ற பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் National கட்சி உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த Bob Katter, 1993ஆம் ஆண்டு அதே கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினரானார். கட்சிக்குள்ளே பல கருத்து மோதல்களுக்கு உள்ளான அவர், 2001ஆம் ஆண்டு கட்சியை விட்டு விலகி சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து வந்த மூன்று தேர்தல்களிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சிக்கு வந்த அரச கட்சிகளுக்கு தொடர் தலைவலியாகவே இருந்திருக்கிறார்.
2011ஆம் ஆண்டு Katter’s Australian Party என்ற கட்சியை ஆரம்பித்த அவர், பிராந்திய இடங்களில் வாழ்பவர்களிடையே உள்ள பிரபலத்தால் நாடாளுமன்றத்திலும், குயின்ஸ்லாந்து மாநில நாடாளுமன்றத்திலும் தனது செல்வாக்கை செலுத்தி வருகிறார்.
இவரைப் போலவே ஒரு தனி மனிதனாக Tasmania மாநிலத்தில் 1920களில் செல்வாக்கு செலுத்தி வந்தவர், Joseph Lyons. Labor கட்சி உறுப்பினராக இருந்த அவர் Tasmania மாநில Premier ஆக ஐந்து வருடங்கள் கடமையாற்றி, பின்னர் 1929ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகினார். Labor கட்சியின் Jim Scullin பிரதமராக இருந்த வேளை அவரது அமைச்சரவையில் இவருக்குப் பதவியும் கிடைத்தது. ஆனால், பிரதமர் Jim Scullinஇன் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத இவர், கட்சியிலிருந்து வெளியேறி, United Australia Party என்ற கட்சியை ஆரம்பித்து, எதிர்க்கட்சித் தலைவருமானார். United Australia Party என்ற கட்சிதான் பின்னர் Robert Menzies தலைமையில் Liberal கட்சியாக உருமாறியது. 1931ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான இவர், எட்டு ஆண்டுகள் பிரதமராகக் கடமையாற்றினார்.
நிறைவாக நாங்கள் பார்க்க இருப்பவர் கதையுடன் ஒப்பிட்டால், நாங்கள் இதற்கு முன்னர் பார்த்த கட்சி மாறிய அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சை எடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லக் கூடும்.
இங்கிலாந்தில் பிறந்த William Morris Hughes, தனது பன்னிரண்டாவது வயதில் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தார். 1893ஆம் ஆண்டு, புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த Labor கட்சியில் இணைந்து கொண்ட இவர், 1901 ஆம் ஆண்டு மேற்கு சிட்னி தொகுதி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அரசியலில் முன்னேறிய இவர் 1915ஆம் ஆண்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7 வருடங்கள் 105 நாட்கள் ஆஸ்திரேலியப் பிரதமராகக் கடமையாற்றிய இவர், பிரதமர் பதவி பறி போன பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியவர். ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் அதிக நாட்கள் – ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 51 வருடங்களும் அதற்கு முன் NSW காலனி பாராளுமன்றத்தில் ஏழு வருடங்களும் உறுப்பினராக இருந்த இவர், Labor, National Labor, Nationalist, Australian, United Australia, மற்றும் Liberal என்று ஐந்து தடவைகள் கட்சி மாறியவர். அதில் மூன்று கட்சிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர். ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் உருவான நாளிலிருந்து 1952ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் இறக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியவர். தனது அரசியல் வாழ்க்கையில் எப்பொழுதும் தான் பிறந்த நாடான இங்கிலாந்திற்கு நன்றி உள்ளவராகவே நடந்து கொண்டார்.